18 Nov 2021

கிழக்குப் பல்கலைகழகத்தின் சௌக்கிய பராமரிப்புப் பீடத்தின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலுப்பை மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம்.

SHARE

கிழக்குப் பல்கலைகழகத்தின் சௌக்கிய பராமரிப்புப் பீடத்தின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு (Department of Primary Health Care) திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலுப்பை மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம்.

குடும்பநல வைத்திய நிபுணரும் சிரேஸ்ர விரிவுரையாளருமான டொக்டர்.கந்தசாமி அருளானந்தம் அவர்களினுடைய வழிகாட்டலில் மருத்துவபீட மாணவர்களின் சமூக செயற்பாட்டின் ஒரு அங்கமாக திங்கட்கிழமை(15)  இடம்பெற்றது. மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் காணப்படும் ஆறு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கும் சௌக்கிய பராமரிப்புப் பீடத்தின் சமூக செயற்திட்டப் பகுதியில் (University Community Project Area) பொருத்தமான இடங்களில் நீண்டகாலப் பயன்தரக்கூடிய மரங்களை நடுவதன் மூலம் எதிர்காலத்தில் அப்பிரதேசத்தினை ஒரு பசுமையான உற்பத்திப் பிரதேசமாக மாற்றும் நோக்கத்திற்கமைவாக ஆரம்பக்கட்டமாக கொக்குவில் கிராம சேவகர் பிரிவில் காணப்படும் பொதுக்காணியினைச் சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டன. அத்தோடு மருத்துவபீட மாணவர்கள் தங்களின் களக்கற்கைக்காக வழங்கப்பட்டிருக்கும் குடும்பங்களின் வீடுகளில் நடுவதற்கான மரக்கன்றுகளும் மாணவர்களிற்கு வழங்கிவைக்கப்பட்டது.

மருத்துவக்குணம் மிக்கதும், நீண்டகாலப் பயன்தரக்கூடியதும் மற்றும் சூழலுக்கு அழகினையும் வளியில் ஒட்சிசன் வாயுவின் செறிவை அதிகரிக்கக்கூடியதுமான பலநற்குணங்களைக் கொண்ட இலுப்பைக் கன்றுகள் நடப்பட்டமை நிகழ்வின் சிறப்பம்சமாகும்.

நிகழ்வில் கிழக்குப் பல்கலைகழகத்தின் சௌக்கிய பராமரிப்புப் பீடத்தின் பீடாதிபதி வைத்திய நிபுணர் னுச.அஞ்சலா அருள்பிரகாசம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் , ஆரம்ப சுகாதார பராமரிப்பு (Department of Primary Health Care) திணைக்களத்தின் தலைவர் வைத்திய நிபுணர் டொக்டர்.கந்தசாமி அருளானந்தம் மற்றும் உதவி விரிவுரையாளர் திரு.நல்லையா சஞ்ஜீவ் , மருத்துவபீட மாணவர்கள் , கொக்குவில் பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர் ரிவீந்தர் , அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி புஸ்பராணி கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள்  மற்றும் கிராமத்தின் பல பொது அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இவ் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக குறித்த பிரதேசத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.












SHARE

Author: verified_user

0 Comments: