மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 45 வது அமர்வு வியாழக்கிழமை(11) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் ஞானமுத்து யோகநாதனின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது எதிர்வருகின்ற 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை தவிசாளர் சமர்ப்பித்தார். சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சபை உறுப்பினர்களால் கருத்துக்கள் பரிமாறப்பட்டு, வாதப் பிரதி வாதங்களும் ஏற்பட்டிருந்தன.
இந்நிலையில் பிரதேச பபைக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அமைந்துள்ள பொது மைதானங்கள், மற்றும் மாயானங்களுக்குரிய குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி ஆகியவற்றை இந்த பாதீட்டில் உள்ளடக்குமாறும், அவ்வாறு இதனை உள்ளடக்காவிட்டால் தான் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், களுவாஞ்சிகுடி வட்டார உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார். இந்நிலையில் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்த விடையங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் பொதுப்பயன்பாடு என்ற விடையத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சபையின் பிரதித்தவிசாளர் திருமதி.கறஞ்சினி தெரிவித்ததையடுத்து சபையின் அனைத்து உறுப்பிளர்களின் ஏக மனதாக 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இதன்போது நிறைவேற்றப்பட்டது.
மேலும் இதன்போது பிரதேச சபைக்குச் சொந்தமான சொத்துக்களின் ஆவணங்களைத் திரட்டுதல், பெரியகல்லாறு விளையாட்டு மைதானம் தொடர்பில் மாவட்ட விளையாட்டு அதிகாரிகளின் பரிந்துரைகள் அடங்கிய கடித்தை பெரியகல்லாறு விளையாட்டுக் கழகங்களுக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டன.
எமது பிரதேச சபையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை நான் இன்றயதினம் முன்வைத்தேன். அதற்கு எமது சபையின் பிரதித்தவிசாளர், மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து ஆதரவு தெரிவித்து 5 வது தடவையாகவும் வெற்றிபெறச் செய்துள்ளார்கள். இது எமது பிரதேச சபையினதும், பிரதேசத்தினதும் ஒன்றுமையைக் காட்டி நிற்கின்றது, ஒத்துழைப்புத் தந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்திலுள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 10 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 2 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் 2 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 4 உறுப்பினர்களும், சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த ஒருவருமாக 21 பேர் அங்கம் வகிக்கின்றனர். இந்நிலையில் சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் அண்மையில் மரணமடைந்ததையடுத்து இனறயதினம் ஏனைய 20 உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்ட இன்றய சபை அமர்வை பார்வையிடுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் வருகை தந்திருந்தார்.
0 Comments:
Post a Comment