சிதைவடைந்து வரும் ஏறாவூர் பொதுச் சந்தையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ஏறாவூர் நகர சபைக்குப் பணிப்பு.
1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் சிதைவடைந்து வரும் ஏறாவூர் பொதுச் சந்தையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யுஹம்பத் ஏறாவூர் நகர சபையைக் கேட்டுக் கொண்டுள்ளதாக அந்நகர சபையின் தவிசாளர் எம்.எஸ். நழீம் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபையின் மாதாந்தப் பொதுக் கூட்டம் அச்சபையின் மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை 26.10.2021 இடம்பெற்றது.
கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய தவிசாளர் நழீம் மேலும் தெரிவிக்கையில் கடந்த கால யுத்தத்தின்போது சேதமடைந்த நிலையில் இன்னமும் இயங்காதுள்ள ஏறாவூர் பொதுச் சந்தைதையைப் புனரமைத்துப் பராமரிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கிணங்க உடனடியாக அங்கு சிரமதானப் பணி இடம்பெறவுள்ளது.
இந்த சந்தை விவகாரம் சம்பந்தமாக ஆளுநருக்குத் தெளிவுபடுத்தப்பட்டதன் அடிப்படையில் உடனடியாக அந்த பொதுச் சந்தையை இயங்க வைக்கத் தேவையான நிதியைப் பெற்றுத் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
எப்படியாவது வரும் டிசெம்பெர் மாதத்திற்குள் சந்தை மீள இயங்குவதற்குத் தோதான சகல நடவடிக்கைகளுக்கும் தான் அங்கிகாரம் வழங்குவதாக ஆளுநர் நம்பிக்கையளித்துள்ளார்.
கட்டிடத் திணைக்களத்தின் அல்லது பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஆதரவைப் பெற்று இந்த பொதுச் சந்தையை மீளத் திறப்பதற்கான நடவடிக்கையை எடுப்பது உசிதமாக இருக்கும் என ஆளுநருக்கு நாம் தெரிவித்துள்ளோம்” என்றார்.
அதேவேளை ஏறாவூர் வரலாற்றில் முதன் முறையாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ள பெண்களுக்கான உடற்பயிற்சி மைதானத்தின் மூலம் பல பெண்கள் உடற்பயிற்சி பெறுகின்றார்கள்.
இது எல்லாத் தரப்பினராலும் வரவேற்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அந்த இடத்தில் பெண்கள் பாதுகாப்பாகவும் அச்சமின்றியும் இயல்பான சூழ்நிலையில் உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றார்கள். இது நோய்களைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு வாய்ப்பளிக்கும் என்றும் தவிசாளர் தனதுரையில் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் ஏறாவூர் நகர சபையின் மொத்தமுள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்களில் 16 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment