நாராயணபிள்ளை நாகேந்திரன் அவர்கள் அரச சேவையிலிருந்தும் அதிபர் சேவையிலிருந்தும் ஓய்வு பெறுகின்றார்.
நாராயணபிள்ளை சந்திரசோதியின் நான்காவது புதல்வராக ஆறு சகோதரங்களுடன் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியினை மட்.பட்.களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயத்திலும், தொடர்ந்து மட்.பட்.பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியிலும் கற்று தனது கலைமாணிப்பட்டப் படிப்பினை பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக நிறைவு செய்து அரசியல் விஞ்ஞானத்துறையில் முதுமாணிப்பட்டத்தினையும், இந்து தர்மாசிரியர் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார். பட்டப்பின் கல்வி டிப்ளோமா, பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா, விசேட பயிற்றப்பட்ட விவசாய ஆசிரியர் என்பவையும் இவரது தொழிற்தகைமைகளாகும்.
இவர் தனது ஆரம்ப நியமனத்தை மட்.பட்.மகிழூர்முனை சக்தி வித்தியாலயத்தில் கடமையேற்றதோடு கமு.கமு.உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும், மட்.பட்.எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்திலும் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். மட்.பட்.எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தில் அதிபர் சேவையில் இணைந்து, இறுதியாக மட்.பட்.பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியிலும் தனது சேவையினை ஆற்றியுள்ளார்.
இவர் தனது பாடசாலைக் கல்விச் சேவைக்காலத்தில், விவசாய பாடத்தையும், உயர்தரத்திற்கு அளவையியலும் விஞ்ஞானமுறையும் சிறப்பாக கற்பித்து பல மாணவர்களை பல்கலைக்கழகங்களிற்கு அனுப்பி பெருமைப்படுத்தியுள்ளார். மேலும் இவர் தனது பாடசாலைக்கல்வி நடவடிக்கைகளுக்கு மேலாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் புதிய பாடநூலாக்க பணியில் எழுத்தாளராகவும், பதிப்பாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். மற்றும் 2005ஆம் ஆண்டு முதல் தேசிய கல்வி நிறுவகத்தினால், நடாத்தப்படுகின்ற கல்விமாணி பட்டக்கற்கை நெறியின் பகுதிநேர விரிவுரையாளராக கடமையாற்றிய போது இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் போன்றோர்களுக்கு ஆசானாக இருந்து கற்பித்தவரும் ஆவார். இக் கற்கை நெறியின் விடைத்தாள் மதிப்பீட்டாளராகவும், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இறுதி நிலைப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டாளராகவும் கடமையாற்றியுள்ளார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்படும் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கை நெறியின் ஆசிரிய உதவியாளராகவும் ஆசிரியர்களை மேற்பார்வை செய்து கடமையாற்றியுள்ளார்.
பாடசாலைக் காலங்களில் கற்றல் கற்பித்தலுக்கு மேலதிகமாக கல்விச் சுற்றுலா, கல்விக் கண்காட்சி, தமிழ்த்தினப் போட்டி, விளையாட்டுப்போட்டி, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள், சென்ஜோன்ஸ் அம்பியுலான்ஸ் படையணி, சாரணியம், சுற்றாடல் படையணி, இலவச பாடநூல் இலவச சீருடை, தேசிய அடையாள அட்டை, ஆசிரியர் நலனோம்பல்;, மாணவர் நலனோம்பல், பல்சுகாதாரம், ஒழுக்க நடவடிக்கைகள் போன்ற அளப்பரிய சேவைகளையாற்றியுள்ளார்.
களுவாஞ்சிகுடி மட்.பட்.பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசலையில் தனது நிருவாகத்திற்கு பொறுப்பான பிரதி அதிபராக கடமையாற்றியதுடன் ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளார். க.பொ.த(உ.த) தொழில்நுட்பவியல் துறையை ஆரம்பித்தல், விளையாட்டு மைதானம், பார்வையாளர் அரங்கு, ஆரம்பக்கல்வி வகுப்பறை மூன்று மாடிக்கட்டிடம், சுற்றுமதில்கள், திருத்த வேலைகள், ஆசிரியர் ஆளணி ஆகிய சேவைகளை, இக்கல்லூரியின் பழைய மாணவராகவும் ஆசிரியராகவும் இருந்து கல்விவெளியீட்டு திணைக்களத்தின் பிரதம கணக்காளராக சேவையாற்றி அதன் பின்னர் கணக்காளர் சேவையின் விசேட தரத்தினை பெற்றுக்கொண்டு தற்போது கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளர்-நிதி விடயத்திற்கு பொறுப்பான களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த சிங்கநாயகம் குலதீபன் அவர்களின் பெருமுயற்சியோடு கல்வி அமைச்சுடன் தொடர்புகொண்டு நிறைவேற்றியுள்ளார்.
குறித்த பாடசாலையில் முன்னர் பதவி வகித்த அதிபர் க.தம்பிராசா அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றதன் பின்னர் 03.06.2020 ஆம் திகதி முதல் 23.09.2020 வரை இவர் பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய காலப்பகுதியில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அதாவது தேசிய விஞ்ஞான மன்றத்தினால் நடாத்தப்பட்ட ஆராய்ச்சிப் போட்டியில் ஐந்து நட்டச்சதிர விருதினைப் பெற்றதுடன் சுவீடன் நாட்டினால் நடாத்தப்பட்ட ‘STOCHHOLMJUNIOR WATER PRIZE 2020’ எனும் சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சிப்போட்டியில் ஆசியாவிலே ஒரே நாடாக இப்பாடசாலையின் மூலமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டது இவரது காலத்திலேயே ஆகும்.
மேலும் இவர் பல சமய, சமூக சேவைகளை ஆற்றியுள்ளார். களுவாஞ்சிகுடி முகாமை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் மற்றும் முகாமை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயங்களின் வண்ணக்கர், செயலாளர் பதவிகளை வகித்ததுடன் யுனிசெப் அனுசரனையுடன் சர்வோதயம் மேற்கொண்ட சிறுவர் நிகழ்ச்சித்திட்ட வளவாளராகவும், களுவாஞ்சிகுடி சைவமகா சபையின் தலைவராகவும், தற்பொழுது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கலாசார அதிகார சபையின்; உபதலைவராகவும் பிரதேச கலாசார பேரவையின் நிருவாக உறுப்பினராகவும், மட்டக்களப்பு மாவட்ட கலாசார அதிகார சபையின் உப செயலாளராகவும், மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் நிருவாக சபை உறுப்பினராகவும், மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் நிருவாக சபை உறுப்பினராகவும், கோவில் போரதீவு கண்ணகி தென்கண்ட கமநல அமைப்பின் தலைவராகவும் இருந்து பல மகத்தான சேவைகளை ஆற்றியமைக்காக நீதி அமைச்சு இவருக்கு அகில இலங்கை சமாதான நீதிவான் பதவியினை வழங்கியுள்ளது.
அத்தோடு இவர் கலை இலக்கிய எழுத்தாக்கப் போட்டிகளில் தேசிய, மாகாண, மாவட்ட, மட்டங்களில் வெற்றியீட்டி பரிசில்களையும் விருதுகளையும் பெற்றுள்ளதுடன் பல நூல்களையும் வெளியீடு செய்துள்ளார். குரு பிரதீபா பிரபா, கலைச்சுடர், ஐந்து நட்சத்திர விருது போன்ற இன்னும் பல விருதுகளை தமதாக்கி கொண்டவராவார்.
இவ்வாறு கல்வி, சமய, சமூக சேவைகளை அர்ப்பணிப்போடு மேற்கொண்டு ஒழுக்கம், நேர்மை என்பவற்றை இரு கண்கள் போன்று தமது வாழ்நாளில் கடைப்பிடித்து வந்த இவர் மனைவி மக்களுடன் அகவை அறுபதில் தனது சேவைக்கால ஓய்வை மனமகிழ்வுடன் கொண்டாடி நூறாண்டு காலம் பெரு வாழ்வு வாழ கல்விச் சமூகம் வாழ்த்துகின்றது.
0 Comments:
Post a Comment