கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தினால் உலருணவு நிவாரண விநியோகம்.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுப்போயுள்ள நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தினால் உலருணவு நிவாரண விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
வெளிச்சம் நிறுவனத்தின் ஊடாக மட்டக்களப்பு மண்முனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சேத்துக்குடா திராய்மடு ஆகிய இரு வேறு கிராமங்களில் சனிக்கிழமை 17.07.2021 இவ்வாறான உலருணவு நிவாரண விநியோகம் இடம்பெற்றது.
அரிசி சீனி கோதுமை மாவு உள்ளிட்ட 10 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் இரண்டாயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய உலருணவுப் பொதிகள் பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
இந்தக் கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடையோர் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்தோர் வறுமை நிலையிலுள்ளள வயோதிபக் குடும்பங்கள் உள்ளிட்ட 80 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் இந்த நிவாரணப் பொதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
சேத்துக்குடா மற்றும் திராய்மடு ஆகிய இரு வேறு பிரதேங்களில் பிரிவுக் கிராம அலுவலர்களான எம்.ஈ. சாமந்தி மற்றும் வை. தனுராஜ் ஆகியோர் உலருணவு விநியோகத்தை ஆரம்பித்து வைத்தனர்.
நிகழ்வில் கிராம முக்கியஸ்தர்கள் தன்னார்வத் தொண்டர்கள் பயனாளிக் குடும்பங்களின் அங்கத்தவர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளை வழங்கி வருவதோடு கலையை வளர்த்தெடுப்பதற்கான பணிகளிலும் தாம் ஈடுபட்டு வருவதாக அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகத்தினர் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக இயல்பு வாழ்வு முடங்கிப்போன நிலையில் பாதிக்கப்பட்டுப் பின்தங்கிய நிலையிலுள்ள தங்களுக்கு தக்க தருணத்தில் கிடைக்கப் பெற்ற இந்த உலருணவுப் பொருட்கள் தமக்கு ஆறுதளிப்பவை என உலருணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் தெரிவித்தனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களுக்கு இவ்வாறானதொரு நிவாரணப் பொதி கிடைத்தது இதுவே முதன்முறையாகும் என பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பல விதவைப் பெண்கள் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment