இரசாயனப் பாவனையற்ற உணவு உற்பத்தியில் காலதாமதமானாலும் நாடு வெற்றியடையும் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்.
இரசாயனப் பாவனையைத் தவிர்த்து சேதன வளமாக்கிகளைப் பாவித்து உணவு உற்பத்தி செய்வதில் சற்றுக் காலதாமதமானாலும் நாடு வெற்றியடையும் என தான் உறுதியாக நம்புவதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் புன்னைக்குடா வீதியை அண்டியுள்ள அப்துல் மஜீத் மாவத்தைக் கிராமத்தில் ஜே.ஏ. அப்துல் ஜவாத் எனும் விவசாயின் தோட்டத்தில் சேதனப் பசளை உற்பத்தி செய்முறை நிகழ்வு புதன்கிழமை 14.07.2021 இடம்பெற்றது.
ஏறாவூர் பிரதேச விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதாஷிரீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் சேதனப் பசளை முறையை ஒதுக்கி வைத்து விட்டு புதுப் புது இரசாயனங்களையும் அசேதன வளமாக்கிகளையும் கொண்டு விவசாய உற்பத்தி இடம்பெறுவதால் இன்று உலகளாவிய ரீதியில் பல்வேறு உடல் உபாதைகள் உருவாகியுள்ளன.
அனைத்து வியாதிகளுக்கும் ஆணிவேராக இரசாயனப் பயன்பாடு மாறியிருக்கிறது. பாரம்பரிய விவசாய உற்பத்திகளை நாம் கைவிட்டதன் பபலாபலனாக இப்பொழுது நாம் ஒட்டு மொத்த நச்சுசு; சூழலுக்குள் அகப்பட்டு ஆரோக்கியமற்றவர்களாக வாழ்கின்றோம்.
எமது முதாதையர்கள் கைக்கொண்ட பாரம்பரிய உணவு உற்பத்தி முறைகளால் அவர்கள் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கின்றார்கள்.
நமது நாட்டிலே நிறைந்த வளங்கள் இருப்;பதால் இயற்கை விவசாயத்தின் மூலம் இந்த நாட்டிலே சாதனை படைக்கலாம்.
இதில் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையினடிப்படையில்தான் ஜனாதிபதியின் இயற்கை விவசாய உற்பத்தி எனும் தீர்மானம் தற்போது நாடு முழுவதும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
ஆனால் அரசாங்கத்தின் இந்த நன்மையான செயற்திட்டங்களையெல்லாம் கருத்திற்கொள்ளாது எதிர்க் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள்.
இலங்கையில் எதைச் செய்தாலும் எதிர்க்கின்ற ஒரு கலாசாரப் போக்கு எதிர்க்கட்சியிடம் இருந்து வந்துள்ளது.
இந்த வீணான கலாசாரம் மாற்றப்பட வேண்டும். எதிர்க்கட்சியின் குழப்பத்திற்கு இடம்கொடுக்காது இந்த இயற்கை விவசாயத் திட்டத்தை ஒட்டு மொத்த நாட்டு மக்களும் உணர்ந்து செயற்படுத்த முன்வரவேண்டும்.
மீண்டும் இரசாயனப் பாவனையை ஊக்குவிப்பது இந்த நாட்டுக்கும் எதிர்கால சந்ததிக்கும் செய்கின்ற மாபெரும் துரோகமாக அமைந்துவிடும்.” என்றார்
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வடக்கு விவசாய உதவிப் பணிப்பாளர் எஸ். சித்திரவேல் கிராம அலுவலர் எம். முஹம்மத்ஷாபி உட்பட இன்னும் பல அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment