காட்டு யானை தாக்கி குடும்பஸ்த்தர் படுகாயம்.
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பகுதியின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட திக்கோடை ஐம்பது வீட்டுத்திட்டப் பகுதியில் செவ்வாய்கிழமை(13) அதிகாலை காட்டு யானை தாக்கியத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….
திக்கோடை ஐம்பது வீட்டுத்திட்டத்தில் உள்ள தனது செங்கல் தொழில் செய்யும் இடத்தில் உறங்கிக் கொண்டிருந்த 4 பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவப்பிரகாசம் என்பவர் அதிகாலை சுமார் 5.30 மணியளவில் எழுந்து வெளியில் வந்தபோது தீடீரென வந்த காட்டுயானை ஒன்று தாக்கிவிட்டுச் சென்றுள்ளது.
இதில் பலத்த காயங்களுக்கும், உபாதைகளுக்கும் உள்ளான நபரை குறித்த அருகிலிருந்தவர்கள் மீட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் மீக நீண்டகாலமாகவிருந்த இந்து காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. இக்காட்டு யானைகளில் தாக்குதலால் அப்பகுதியில் பல அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டும், பயிர்கள், வீடுகள், உள்ளிட்டவற்றையும் துவசம் செய்து வருகின்றன.
அப்பகுதியில் உள்ள பற்றைக் காடுகளில் தங்கியிருக்கும் காட்டுயானைகளை பிடித்து சரணாலயங்களுக்குக் கொண்டு விடுமாறு அப்பகுதி மக்கள் மிகவும் உருக்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment