15 May 2021

தற்காலிகமாக அமைக்கப்படவுள்ள வைத்தியசாலை தொடர்பான கலந்துரையாடல்.

SHARE

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று கரடியனாறு பகுதியில் அமைக்கப்படவுள்ள கொரோனா நோயாளிகளுக்காக தற்காலிகமாக அமைக்கப்படவுள்ள வைத்தியசாலை தொடர்பான கலந்துரையாடல்.

கொவிட் சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக மாவட்டத்தில் 1000 கட்டில்களை தயார்படுத்தும் செயற்பாடுகள் தற்போது  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும்,  பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்பு  செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஸ  அவர்களின் சிந்தனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் முன்மொழிவுக்கு அமைய ஏறாவூர்ப் பற்று கரடியனாறு பகுதியில் அமைக்கப்படவுள்ள கொரோனா நோயாளிகளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய  தற்காலிக வைத்தியசாலையை அமைப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று  வெள்ளிக்கிழமை (14)  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் 100 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட தற்காலிக வைத்தியசாலையை அமைப்பதற்கான முன்னாயத்தங்கள் தொடர்பாகவும், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் மலசல கூட வசதிகள் உள்ளிட்ட மேலும் பல தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன், பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் தமிழ் பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழுக்களின் பிரதித் தலைவருமான பா.சந்திரகுமார், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சர்வானந்தன், கிழக்கு மாகாண கொவிட் செயலணியின் இணைப்பாளர் வைத்திய கலாநிதி அச்சுதன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம்,

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளர் வீ.பற்குணன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.புண்ணியமூர்த்தி சசிகலா உள்ளிட்ட துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

கொவிட் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் கொவிட் நோயாளர்களாக இனங்காணப்பட்ட எமது மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதுவரைக்கும் வெளி மாவட்டங்களுக்கு சிகிட்சைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டமை மிக  குறைவு எனவும், இனிவரும் நாட்களில் கட்டில்களை அதிகமாக தயார்படுத்துவது தேவைப்பாடாக இருப்பதாக சுகாதார துறையினர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 








SHARE

Author: verified_user

0 Comments: