22 Mar 2021

ஏழு இலெட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட பொதுக்கிணறு மக்களிடம் கையளிப்பு.

SHARE

ஏழு இலெட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட பொதுக்கிணறு மக்களிடம் கையளிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான அருவி பெண்கள் வலையமைப்பானது மட்டக்களப்பு அக்குராணை, மினுமினுத்தவெளி மற்றும் முறுத்தானை ஆகிய கிராம மக்களின் குடிநீர் பிரச்சனையினை தீர்த்து வைக்கும் முகமாக பொது கிணறு ஒன்றினை நிறுவி கையளிக்கும் நிகழ்வு  நடைபெற்றது.

அருவி பெண்கள் வலையமைப்பானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேச செயலகபிரிவுகளில் பெண்கள் சார்ந்த வேலைத்திட்டங்கள் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தி மாணவர்களின் கல்வி சுகாதாரம் சமூக பாதுகாப்பு போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை மாவட்ட செயலகத்துடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அக்குராணை மினுமினுத்தவெளி மற்றும் முறுத்தானை ஆகிய கிராம மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் வசதியினை பெற்றுக்கொடுப்பதற்காக 7 இலட்சம் ரூபா செலவில் கிராமத்துக்கான பொது கிணறு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டதுடன் பெண்களுக்கான சுகாதார பொருட்கள் அடங்கிய பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

சட்டத்தரணியும் அருவிப்பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளருமாகிய மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா அகம் மனிதாபிமான வள நிலைய இணைப்பாளர் க.லவகுசராஜா கிராம சேவை உத்தியோகஸ்தர் சமுர்த்தி உத்திளோகஸ்தர் கிராம அபிவித்திச்சங்க தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து அரசாங்க அதிபருடன் அக்கிராம மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது இதன்போது பாடசாலைக்கான ஆசிரியர் மற்றும் வகுப்பறை பற்றாக்குறை தொடர்பாகவும் வைத்தியசாலைக்கு நிரந்தரமான வைத்தியர் மற்றும் மருத்துவ வசதி தேவை தொடர்பாகவும் மற்றும் பாதுகாப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இவற்றுள் பிரதான விடயமாக வீதி போக்குவரத்து வசதி மிகவும் கடினமானதாகவும் பாதுகாப்பற்றதாகவும் காணப்படுகின்றமையால் அவற்றினை நிவர்த்தி செய்யும் முகமாக மூக்கிரையான் ஓடைக்கான பாலம் அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு இக்கோரிக்கைகளை  முன்வைத்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. 

மேற்படி நிகழ்வுக்கான விஜயத்தினை மேற்கொண்ட அரசாங்க அதிபர் நேரடியாக அந்த குறைகளை கண்டறிந்ததுடன் அதற்கான உரிய நடைமுறைகளை முன்னெடுத்து செல்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.



















SHARE

Author: verified_user

0 Comments: