அரசின் கிராமிய மைதானங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் சுமார் 21 மில்லியன் செலவில் 14 மைதானங்கள் தெரிவு.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கீழ் செம்மையான முன்னேற்றமிக்க இளைஞர்களை உருவாக்குவோம் என்ற செயற்றிடத்தின் அடிப்படையில் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் நாட்டிலுள்ள 332 கிராமிய மைதானங்களை புணரமைக்கும் தேசிய வேலைத்திட்டம் நாடுபூராகவும் செவ்வாய்கிழமை (02) சுபவேளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இவ்வேலைத்திட்டம் ஏறாவூர்ப்பற்று செங்கலடி மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் இடம்பெற்றது.
ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதான அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை பாராளுமன்ற உறுப்பினரும் பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சருமாகிய சதாசிவம் வியாழேந்திரன் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.
செங்கலடி பிரதேச செலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேலதி அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம், செங்கலடி பிரதேச சபை தவிசாளர் எஸ். சர்வானந்தா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. கருணாகரன், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். வை. ஆதம், உட்பட அரச அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அரசினால் நாட்டிலுள்ள 332 கிராமிய விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் 14 மைதானங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment