28 Feb 2021

சொகுசுக் காரில் சென்று போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினருக்கு விளக்கமறியல்.

SHARE

சொகுசுக் காரில் சென்று போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினருக்கு விளக்கமறியல்.

சொகுசுக் காரில் சென்று போதைப் பொருள் விநியோகம் மற்றும் விற்பனையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தங்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வெள்ளிக்கிழமை  மட்டக்களப்புகொழும்பு நெடுஞ்சாலையில் சொகுசுக் காரொன்றை வழிமறித்துச் சோதனையிட்டபோது அக்காரில் பயணம் செய்த இளம் தம்பதியினரிடமிருந்து ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஓட்டமாவடியைச் சேர்ந்த 31 வயதான கணவனிடமிருந்து 160 மில்லி கிராம்  மற்றும் 27 வயதான மனைவியிடமிருந்து  140  மில்லிகிராம் ஹெரோயினை தாம் கைப்பற்றியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்தத் தம்பதியினர் மிகவும் சூட்சுமமான முறையில் பாரிய அளவில் போதைப் பொருள் விநியோகம் மற்றும் வியாபாரத்திலீடுபட்டு வருவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சந்தேக நபர்களின் நடமாட்டத்தை அவதானித்து வழிமறித்தாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது சந்தேக நபர்கள் பயணித்த சொகுசுக் காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.



SHARE

Author: verified_user

0 Comments: