மல்லிகை டொமினிக் ஜீவா பன்முக ஆளுமை கொண்டவர்!
ஈழத்தமிழ் இலக்கிய உலகு இன்னும் ஒரு படைப்பாளியை இழந்து நிற்கின்றது. அவர் விட்டுச் சென்றுள்ள பணியைப் பொறுப்பேற்று தொட்டுத் துலங்க வைப்பதே அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாம் செய்யும் பிரார்த்தனையாகும் என “மல்லிகை” சஞ்சிகையின் ஆசிரியரும், இலக்கியவாதியுமான டொமினிக் ஜீவாவின் மறைவு குறித்து மட்டக்களப்பிலிருந்து தொடர்ந்து வெளிவரும் “தென்றல்” சஞ்சிகை ஆசிரியர் க.கிருபாகரன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது… மல்லிகை ஜீவா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட அமரர் பன்முக ஆளுமை கொண்டவர். பழகுவதற்கு இனிமையானவர், சினமறியா, புன்சிரிப்பாளர், மல்லிகை சஞ்சிகை, மல் லிகைப் பந்தல் ஊடாகப் பல்வேறு இதழ்களைத் தமிழ் கூறும் இலக்கிய உலகுக்கு ஈந்தளித்தவர்.
வீரகேசரி உட்பட பல பத்திரிகைகளில் அவரின் அனுபவப் பகிர்வுகள் வெளிவந்துள்ளன.
சஞ்சிகை வெளியீடு என்றால், போதும் என்று ஒதுங்கிக் கொள்ளும் இன்றைய கால கட்டத்தில் அவர் தனியொருவராக நின்று இறுதி மூச்சு வரை மல்லிகையை வெளிக் கொணர்ந்தவர்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயரிய சிந்தனைக்கமைய பல்வேறு சஞ்சிகைகளுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அந்த நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை. அவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம் என அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment