கிழக்கு மாகாணத்தில் பல பிரதேசங்கள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக அறிவிப்பு - கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர்.
கிழக்கு மாகாணத்தில் சனிக்கிழமை(07) நள்ளிரவு 12 மணிவரையில் 2536 நபர்கள் கொவிட் - 19 தொற்று உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக எமது தரவுகள் சுட்டிக்காட்டுகின்றது. இந்நிலையில் கடந்த 12 மணித்தியாலங்களுக்குள் கிழக்கு மாகாணத்தில் 14 நபர்கள் தொற்றுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவற்றில் தமண பகுதியில் 6 பேரும். தெஹியத்தகண்டிய பகுதியில் 3 பேரும், காத்தான்குடி பகுதியில் 5 நபர்களும் அடங்குகின்றனர். அதனடிப்படையில் இந்த வாரம் காத்தான்குடி, அம்பாறை, கல்முனை தெற்கு, தமண, கல்முனை வடக்கு, காரைதீவு, திருகோணமலை, ஆகிய சுகாதாரப் பரிவுகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.
என கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் மட்டக்களப்பிலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை(07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் கொவிட் - 19 தொற்றினால் 16 மரணங்கள் சம்பவித்துள்ளன. தற்பொழுது 265 நபர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். 2278 நபர்கள் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளார்கள்.
திருகோணமலை மாவட்டத்தில் 486 நபர்களும், மட்டக்களப்பு மவாட்டத்தில் 619 நபர்களும், அம்பாறை பிராந்தித்தில் 175 நபர்களும், கல்முனைப் பிராந்தியத்தில் 1256 நபர்களும், பேலியகொட மீன்சந்தை கொத்தணியின் பின்னர் கொவிட் -19 தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். தற்போது இதன் தாக்கங்கள் ஒரு மட்டமான நிலையில் செல்கின்றது. இருப்பினும், ஆங்காங்கே தொற்று உள்ளவர்கள் எம்மால் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இந்த தொற்றுனுடைய தாக்கமும், பாதிப்பும் முற்றாக கிழக்கு மாகாணத்தை விட்டு நீங்கவில்லை. எதிர்வருகின்ற காலத்தில் எம்மால் வழங்கப்படுகின்ற சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறும் பட்சத்தில் மீண்டும் தொற்றுனுடைய தாக்கம் ஏற்படும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. மக்களுடைய நடமாட்டம் பரவலாகக் காணப்படுவதனால் எந்த வகையிலும், இத்தொற்று கிழக்கு மாகாணத்திற்கு வருவதற்குரிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
இத்தொற்றினுடைய தாக்கமும், வடிவங்களும், உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ளன. அது மேலும் இலங்கைக்கும் வருகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. எனவே தொற்று இலங்கையிலிருந்து முற்றுமுழுதாக அகலும்வரை கிழக்கு மாகாணத்திற்கும் அதன் பாதிப்பு காணப்படும்.
சுகதாரத்துறை ஊழியர்களுக்கு முதற்கட்டமாக கொவிட் - 19 தடுப்பூசி கிழக்கு மாகாணத்தில் 4 பிராந்திங்கள் ஊடாக 14000 பேரை மையப்படுத்தி இந்த தடுப்பூசியை வழங்கியிருந்தோம். அது கிழக்கிலுள்ள 46 சுகாதார சிகிச்சை நிலையங்களிலும், மத்திய அரசு மற்றும் மாகாண சபைக்குட்பட்ட வைத்திசாலைகளிலும், இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனாலும் இதுவரையில் கிழக்கில் 8503 நபர்களுக்கு கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளன. அதில் மட்டக்களப்பில் மாவட்டத்தில் 2971 நபர்களுக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 1510 நபர்களுக்கும், கல்முனைப் பிராந்தியத்தில் 1418 நபர்களுக்கும், அம்பாறைப் பிராந்தியத்தில் 1799 நபர்களுக்கும், இந்த ஊசி ஏற்றப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு மீண்டும் ஒரு மாத்திற்குப் பிற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த தடுப்பூசி ஏற்றிய பின்னர் எவருக்கும் எதுவித பாரிய பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. ஆகவே இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை நாம் வெற்றிகரமாக முன்நெடுத்துள்ளோம்.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நாம் பல கட்டங்களாக கோறளைப்பற்று மத்தி அக்கரைப்பற்று, கல்முனை, திருகோணமலை, காத்தான்குடி, பல பகுதிகளிலும், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர் பெறப்பட்ட முடிவுளின் அடிப்படையில் அப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. காத்தான்குடியில் ஒரு சில வீதிகளைத் தவிர்த்து ஏனைய வீதிகளை தனிமைப்படுத்தலிலிருந்து அகற்றலாம் என எமது தொழில்நுட்பக் குழு தெரிவித்துள்ளது. அதனை நாம் சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ளோம். அவ்வாறு தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டாலும் கொவிட் - 19 உடைய தாக்கம் முற்றுமுழுதாக நீங்கவில்லை. எனவே மக்கள் எம்மால் வழங்கப்படுகின்ற சுகாதார வழிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும்.
அதுதாத்திரமின்றி காத்தான்குடிப் பகுதியிலும். மட்டக்களப்பு பகுதியிலும், டெங்கு நோயின் தாக்கமம் அதிகரித்து வருகின்றன. எனவே மக்கள் கொரோனா மாத்திரமின்றி வீட்டையும், சூழலையும் டெங்கு நுளம்புகள் பரவாத வண்ணம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment