காத்தான்குடியின் 10 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படவில்லை-மீண்டும் திங்கள்முதல் தனிமைப்படுத்தும் சட்டம் அமுல்.
காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 கிராம சேவையாளர் பிரிவுகளில் 7 கிராம சேவையாளர் பிரிவுகள் ஞாயிற்றுக்கிழமை(31) முதல் விடுவிக்கப்படுவதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவ்வாறானதொரு தீர்மானம் உத்தியோகபூர்வமாக எடுக்கப்படவில்லை என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடியில் கொரோனா நிலைமை காரணமாக 18 பிரிவுகள் முடக்கப்பட்டு அவற்றில் 8 பிரிவுகள் தவிர்ந்த 10 பிரிவுகளின் முடக்கம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாதொரு நிலையில் ஞாயிற்றுக்கிழமை(31) காலை 7 கிராம சேவகர் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
காத்தான்குடி நகர சபை மற்றும் உள்ளூர் சுகாதாரத் துறையினரால் இவ்வாறு இந்தக் கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை கடைகள் யாவும் திறக்கப்பட்டு நகரம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தது. ஆனால், அவ்வாறு விடுவிக்கும் அதிகாரம் உள்ளூர் மட்டத்துக்கு இல்லை.
முடக்கப்பட்டுள்ள பிரதேசத்தை விடுவிப்பது தொடர்பில் உள்ளூர் மற்றும் உயர்மட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அதனுடன் தொடர்புடையோரின் கலந்தாலோசனை, கள நிலைமைகளின் பின்பே தீர்மானிக்க முடியும்.
உத்தியோகபூர்வமாக முடக்கப்பட்ட பிரதேசத்தை அல்லது பிரதேசங்களை விடுவிப்பதாயின், அது தொடர்பில் கொழும்பு சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்துக்கு நாம் எமது பரிந்துரையை அனுப்புவோம்.
பின்னர் எமது பரிந்துரையை அவர்கள் கொரோனா தடுப்பு தேசிய செயலணிக்கு அனுப்பி அவர்களின் இறுதித் தீர்மானத்தின்படியே விடுவிக்க முடியும்.
இதனை விடுத்து இவ்வாறு உத்தியோகபூர்வமற்ற வகையில் விடுவிக்கப்பட்டுள்ளமையானது சட்ட விதிகளுக்குப் புறம்பானது என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
இந்திலையில் காத்தான்குடி பிரதேசத்தின் 10 கிராம சேவைவ்வாளர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் சட்டம் திங்கட்கிழமை(01) முதல் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. திங்கட்கிழமை குறிப்பிட்ட 10 பகுதிகளில் கடைகள் யாவும் மூடப்பட்டிருந்தன.
0 Comments:
Post a Comment