சர்வதேச, தேசிய தர நியமங்களுக்கேற்ப உற்பத்தி செய்யப்படும் சுத்தமான நீர் வீடுகளில் அசுத்தமாகலாம்!
சுத்தமற்ற நீரை அருந்துவது அல்லது பாவனைக்கு உபயோகிப்பது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாகும். உலக சனத்தொகையில் 663 பில்லியன் மக்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக உள்ளனர் (யுனிசெப் 2017). இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் சுத்தமான குடிநீர் ஒவ்வொரு மனிதனின் உரிமை என 2010ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கான சுத்தமான பாதுகாப்பான நீரினை வழங்குகின்ற இலங்கையின் தேசிய நிறுவனமான தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, பிரதான நீர் மூலத்திலிருந்து உள்ளெடுப்பகம் வாயிலாக (Intake) பெறப்படும் நீரினை (Raw Water) அதன் தரத்திற்கேற்ப பல படிமுறைகளினூடாக நாடு பூராகவும் உள்ள தனது நவீன தொழில் நுட்ப வசதிகளைக்கொண்ட 270 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் இங்கையின் தர நியமங்கள் (SLS 614), சர்வதேச தர நியமங்கள் (ISO) மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்கள் போன்றவற்றின் அடிப்படையில் 24 மணி நேர தொடர்ச்சியான நேரடி கண்காணிப்பின் கீழ் நீரினை உற்பத்தி செய்து அதன் தரம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வழங்கிவருகின்றது.
பாதுகாப்பற்ற குடிநீர், குறைந்த சுகாதார வசதிகள் போன்றன அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் குறிப்பிடத்தக்க நோய்களை தோற்றுவிக்கவல்லதாக காணப்படுகின்றன. இதன் காரணமாக ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான மரணங்கள் இடம்பெறுகின்றன. இதனை குறைப்பதில் சுத்தமான நீரின் பங்களிப்பானது மிக முக்கியமானதாகும்.
இதனை கருத்திற்கொண்டு உலக சுகாதார நிறுவனம் (WHO) நீர் பாதுகாப்பு திட்டம் (Water Safety Plan-WSP) என்ற ஒரு செயற்பாட்டு அணுகுமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. நீர் பாதுகாப்பு திட்டம் என்பது நீரேந்து பகுதி (Catchment) தொடக்கம் பாவனையாளர் வரை நீர் விநியோகத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய ஒரு விரிவான இடர் மதிப்பீடு மற்றும் இடர் முகாமைத்துவ அணுகுமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் குடிநீரின் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டமாகும். அதாவது குடிநீர் நுகர்வோரை அடைவதற்கு முன் அதன் தரத்தில் கெடுதல் அல்லது மாசுபடுதலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் செயற்பாட்டு ரீதியான ஒரு உத்தி எனலாம்.
இதன் நோக்கம் பொது சுகாதாரத்தை பாதுகாத்தல், நீர் வளம் மாசுபடுதலை தடுத்தல் அல்லது குறைத்தல், நீர் சுத்திகரிப்பின் ஊடாக மாசுகளை அகற்றுதல் மற்றும் நீரை சேமித்தல், விநியோகித்தல், வீட்டு இணைப்புக்கள் மற்றும் கையாளுதலின் போது மாசுபடுதலை தடுப்பது போன்ற சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதாகும்.
இலங்கையிலும் இந்த நீர் பாதுகாப்பு திட்டம் 2013ம் ஆண்டு தொடக்கம் தேசிய நீர் வழங்கல் சபை ஊடாக வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இது நீர் ஏந்து பகுதி/நீர் மூலம், நீர் சுத்திகரிப்பு, நீர் சேமிப்பு, விநியோகம் மற்றும் பாவனையாளர் ஆகிய நான்கு பிரதான பகுதிகளை கொண்டுள்ளது. இதில் முதல் மூன்று பகுதிகளிலும் நீரின் பாதுகாப்பிற்கு சவாலாக உள்ள காரணிகளை இனம் கண்டு அவைகளை உரிய உபாயங்களை கைக்கொண்டு தடுக்கின்ற, மேம்படுத்துகின்ற பணிகளை தேசிய நீர் வழங்கல் சபை வினைத்திறன்மிக்க வகையில் மேற்கொண்டுவருகின்றது. ஆனால் நான்காவது பகுதி முற்றிலும் பாவனையாளர்களை சார்ந்ததாகவே உள்ளது.
அண்மைய தரவு சேகரிப்பு மற்றும் அவதானிப்புக்கள் மூலம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் சுத்தமான நீரின் தரத்தில் பின்வரும் காரணிகள் அல்லது செயற்பாடுகள் பாவனையாளர் மட்டத்தில் தாக்கம் செலுத்துவதனை அறியமுடிகிறது.
குறைந்த தரமுடைய குழாய்கள், உதிரிப்பாகங்களை கொண்டு வீட்டின் உள்ளக குழாய் வலையமைப்பினை தகுதி அற்ற குழாய் பொருத்துனர்கள் மூலம் முறையற்ற விதத்தில் மேற்கொள்ளுதல் இதனால் நீர்க் கசிவுகள், அடிக்கடி உடைவுகள் ஏற்பட்டு நீரின் தரம் பாதிப்பிற்குள்ளாதல்.
வீடுகளில் போதியளவு தொற்று நீக்கப்படாத நீர் சேகரிப்பு தாங்கிகளில் நீரினை சேமிக்கும் போது பாசி (Algae) மற்றும் பிற நுண்ணுயிரிகள் தாங்கியில் வளர்வதற்கு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. பெரும்பாலான பாவனையாளர்கள் நீரத் தாங்கிகளில் நீரினை சேமித்து வைத்து பாவிக்கின்ற பழக்கத்தினை கொண்டிருக்கின்றனர். இது நீர் குழாய் வெடிப்பு, நீர் கசிவு, அவசர பராமரிப்பு போன்ற இன்னோறன்ன காரணிகளால் நீர் விநியோகம் தடைப்படும் சந்தர்ப்பங்களில் அதனால் எற்படும் அசௌகரியங்களிலிருந்து தவிர்ந்து கொள்ள உதவுகிறது.
மேலும் பாவனையாளர்களால் அவர்களது நீர்த் தாங்கிகள் தொடர்ச்சியாக அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சுத்தம் செய்யப்படுகின்ற நிலையினை அவதானிக்கும் போது அது குறைந்த சதவீதமாக உள்ளது.
இதற்கான காரணங்களாக பின்வருவன அடையாளம் காணப்பட்டுள்ளன.
·சுத்தமான நீரினை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வழங்குவதனால் அதனை சேமிக்கும் தாங்கிகளை அல்லது சேமிப்பு பாத்திரங்களை சுத்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என கருதுதல்.
· நீர்த் தாங்கிகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சுத்தம் செய்யவேண்டிய அவசியம் குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாமை.
· பெரும்பாலான நீர்த் தாங்கிகள் வீட்டின் மேல் பகுதியில் இருப்பதனால் அதனை சுத்தம் செய்தல் சிரமமான ஒன்றாக கருதுதல்.
மேலும் பொது இடங்களில் பொது மக்கள் அருந்துவதற்காக நீர்த்திருகிகள் (Tap) ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றிக்கான நீர் பொதுவாக நீர்த் தாங்கிகளிலிருந்து வழங்கப்படும் ஆனால் இந்த நீர்த் தாங்கிகள் பல மாதங்களாக இன்னும் வருடங்களாக சுத்தம் செய்யப்படாத நிலையிலும் அவற்றிக்கான குழாய் வலையமைப்புக்கள் முறையான பராமரிப்பின்றியும் இருப்பதனையும் அறியமுடிகின்றது.
நீரைச் சேகரிக்க சிறிய அல்லது கைப்பிடி அற்ற மற்றும் குளிப்பதற்கு வடிவமைக்கப்பட்ட பாத்திரங்களில் நீரை சேகரித்தல் இதன் ஊடாக கைகளிலிருந்து நுண்ணுயிர் நோய்க்கிருமிகள் நீரிற்குள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் நீர் மாசடைதல்.
நீர் வழங்கல் சபையினால் வழங்கப்படும் சுத்தமான குழாய் நீர் மற்றும் மாற்று நீர் மூலங்களிலிருந்து (கிணறு, குழாயக் கிணறு) பெறப்படும் நீரினையும் ஒரே தாங்கியில் அல்லது பாத்திரத்தில் சேமித்து பாவித்தல் அல்லது குழாய்களின் மூலம் தொடர்புபடல்.
வீட்டு நீர் வடிகட்டியினை அதன் அறிவுறுத்தல்களை பின்பற்றாமலும் முறையான பராமரிப்பின்றியும் கண்ணுக்கு புலப்படாத அதன் இரசாயண சேர்மானங்கள் கசிந்து நீருடன் கலக்கும் நிலையிலும் தொடர்ச்சியாக பாவித்தல். மேலும் சட்டவிரோதமான முறையில் நீர் இணைப்பினை ஏற்படுத்தி பாவிக்கும் போது அதனால் ஏற்படும் எதிர் நீரோட்டம் காரணமாக அசுத்தமான நீர், நீர் விநியோக குழாய் வழியாக ஏனைய பாவனையாளர்களுக்கும் செல்லுதல்.
மேற்படி விடயங்களை அவதானிக்கும் போது ஆரோக்கிய நலன் குறித்த நீர் பாவனையாளர்களின் குறைந்த பார்வையும் மனித ஆரோக்கியத்தின் மறுவடிவம் கொண்ட சுத்தமான நீரின் தரத்தைப் பாதுகாப்பதற்கான அவர்களின் பொறுப்பில் போதிய விழிப்புணர்வின்மையும் கூடுதலாக தாக்கம் செலுத்துவதனை அறியமுடிகிறது.
எனவே திட்டமிட்ட அடிப்படையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் முகாமைத்துவ வழிகாட்டலில் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நீர் பாதுகாப்புத் திட்டத்தின் முழுமையான வெற்றி என்பது பாவனையாளர்கள் தமது பொறுப்பினை உணர்ந்து அதற்கேற்ப தமது நடத்தைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி செயற்படுவதன் மூலமே அடைய முடியும் என்பது திண்ணமாகும்.
எம்.எஸ்.எம். சறூக்
சிரேஷ்ட சமூகவியலாளார்,
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை
0 Comments:
Post a Comment