காட்டு யானை தாக்கியதில் இருவர் மரணம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு இடங்களில் காட்டு யானை தாக்கியதில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் மியான்கல் வயல்பகுதியில் வயலில் அமைக்கப்பட்டிருந்த பரணில் காவலில் ஈடுபட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான திருவேம்பலம் சோமலிங்கம் (வயது 64) என்பவர் செவ்வாய் 26.01.2021 அதிகாலை காட்டு யானை தாக்கியதில் ஸ்தலத்திலேயே மரணித்துள்ளார்.
மாமன் மருமகன் ஆகிய இருவரும் வயல் பரணில் காவலில் ஈடுபட்டிருந்தபோது மருமகன் நித்திரையிலிருக்க மாமன் அங்கே பிரவேசித்த காட்டு யானையை விரட்ட முற்பட்டுள்ளார். அப்போது மூர்க்கம் கொண்ட யானை இவரைத் தாக்கிக் கொன்றுள்ளது.
உடற்கூராய்வுப் பரிசோனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை புதன்கிழமை 27.01.2021 பொழுது புலரும்போது காட்டு யானை தாக்கியதில் பழைய சந்தை வீதி சித்தாண்டி 4 எனும் கிராமத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை தயாபரன் (வயது 34) என்பவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள லாவாணை எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.
இவர் தனது வயல் வாடியிலிருந்து இன்னொரு வயல் வாடிக்கு காலை உணவுக்காகச் சென்றுகொண்டிருக்கும்போது காலை 6.45 மணியளவில் குறுக்கிட்ட காட்டு யானை இவரைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சமீபத்தில் திருமணமான இவர் லாவாணை விவசாயப் பகுதியில் விவசாய வேலைகளிலேயே ஈடுபட்டு வருபவர் என உறவினர்கள் தெரிவித்தனர்.
சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment