புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் தற்போதைய நிலைமையினைக் கண்டறிய கொழம்பிலிருந்து விசேட குழு விஜயம்.
புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் தற்போதைய நிலைமையினைக் கண்டறிவதுடன் தேவையான மேல்நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசிங்க தலைமையிலான குழு மட்டக்களப்பிற்கு புதன்கிழமை (02) விஜயம் ஒன்றை மேற்கொண்டது.
வெபர் மைதானத்தின் பார்வையாளர் அரங்கு, மைதானம், உட்புற விளையாட்டு மைதானம், நீச்சல் தடாகம் போன்ற இடங்களையும் அவற்றுக்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் இவ்விசேட குழு பார்வையிட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளையும், பராமரிப்பு விடயத்திலுள்ள இடைவெளிகளையும் கேட்டறிந்து கொண்டது.
இதனைத் தொடர்ந்து இக்குழுவினருக்கும், மாவட்ட விளையாட்டுத் துறை உத்தியோகத்தர்கள், வெபர் மைதானத்தை பராமரிக்கும் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவினருக்கிடையிலான சந்திப்பொன்று மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கருணாகரன் தலைமையில் மாவட்டஇடம்பெற்றது.
இதன்போது இம்மைதானத்தில் காணப்படும் குறைபாடுகள், நிவர்திதக்கப்பட வேண்டிய விடயங்கள், மேம்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக மாவட்ட விளையாட்டு துறைப்பிரிவினராலும், மாநகர சபைப் பிரிவினராலும் கருத்துக்கள் மற்றும் வேண்டுகோள்கள் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசிங்கவிடம் முன்வைக்கப்பட்டது.
இக்கள விஜயத்தின்போது காணிப்பிரிவிற்கான மேலதி அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாநகர சபை ஆணையாளர் ஏ. சித்திரவேல் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் ஐ.பீ. விஜயரத்ன, கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் என்.எம். நௌபீஸ், விளையாட்டு அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர் விளையாட்டு அமைச்சு மற்றும் திணைக்கள பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் உள்ளிட்ட பணிக்குழுவினர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ. ஈஸ்வரன், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை. ஆதம்லெப்பை உட்பட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
0 Comments:
Post a Comment