எந்த ஒரு வெளி மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருபவர்களும் தனிமைப்படுத்தலுக்குட்படவேண்டும் - அரசாங்க அதிபர் கருணாகரன் வேண்டுகோள்.எந்த ஒரு மாவட்டத்திலிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருபவர்கள் அனைவரும் தம்மை சுய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இம்மாவட்டத்திலிருந்து பிறமாவட்டங்களுக்கு தொழில் நிமித்தம் சென்று வருபவர்கள் அல்லது அங்கு தங்கி தொழில் புரிபவர்கள் அல்லது வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அரச, தனியார் மற்றும் சுயதொழில் புரிபவர்கள், அல்லது பிற மாவட்டத்தில் வசிக்கும் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்திருந்தால் எவராக இருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு இம்மாவட்டத்திற்குள் வருகைதந்தவர்கள் தமது விபரங்களை பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது பொலிஸ், அல்லது பிரதேச செயலாளர் அல்லது தமது கிராம சேவை உத்தியோகத்தர்களிடம் தெரிவித்து இரண்டு வாரங்கள் வீடுகளுக்குள்ளே தனிமைப்படுத்தலில் இருந்து கொள்ளுமாறும் இக்காலப்பகுதிக்குள் தமக்கு ஏதாவது நோய்த் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அதசாங்க அதிபர் கருணாகரன் தெரிவித்தார்.
பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடையவர்கள் தவிர்ந்த வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்களில் 5பேர் கொரோனா நோயாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கடமை நிமிர்த்தம் வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்களும், அவ்வாகனங்கள் பற்றிய விபரங்களை குறித்த திணைக்களங்கள் மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துவிட்டுச் செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதுதவிர கொரோனா நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ள வெல்லாவெளி, பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த எனைய பிரதேசங்களில் சிகைஅலங்கார நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்படுவதுடன், சகல சுகாதார விதிமுறைகளைப் பேணுவதுடன் வருகின்ற வாடிக்கையாளர்களது விபரங்களை பதிவேடொன்றில் பதிந்து கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் கருணாகரன் கேட்டுக்கெண்டுள்ளார்.
0 Comments:
Post a Comment