மட்டக்களப்பு எல்லைப்பகுதிகள் அம்பாரை மற்றும் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் அத்துமீறி சேனைச்செய்கை செயற்பாடுகளில் ஈடுபாடு.செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மயிலத்தமடு, மாதவணை கிராம சேவகர் பிரிவுகளில் அம்பாறை மற்றும் பொலன்னறுவ மாவட்ட விவசாயிகள் சுமார் மூவாயிரம் ஏக்கர் காணியில் அத்துமீறி குடியேறி காடுகளை வெட்டி சேனைப் பயிர்ச் செய்கைக்குத் தயாரிகி வருகின்றனர்.
இதனால் பெரும்போக நெற்செய்கையின்போது இம்மாவட்டத்தின் செங்கலடி, கிரான், பட்டிப்பளை,
வெல்லாவெளி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட சுமார் ஆயிரம் கால்நடை வளர்ப்பாளர்களின் இரண்டு இலட்டசம் கால்நடைகளை பாரம்பரியமாகக் கொண்டு செல்லும் நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.
இக்கால்நடை வளர்ப்பாளர்களின் முறைப்படுகளையடுத்து மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையிலான உயர்மட்டக்குழு களவிஜயம் ஒன்றை இன்று (12) மாந்திரிஆறு பிரதேசத்திலிருந்து மயிலத்தமடு மற்றும் மாதவணை பிரதேசங்களுக்கு மேற்கெண்டது.
இதன்போது சேனைச் செய்கைக்காக காடுகள் வெட்டப்பட்டுள்ள பகுதிகளையும், அத்துமீறி குடியேறியுள்ள இடங்களையும் பார்வையிட்டதுடன் இச்செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள், கால்நடை பண்ணையாளர்களையும் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கையில் சேனைச் செய்கைக்கான காணி தமக்கு இல்லாத காரணத்தினாலேய தாம் இங்கு வந்து காணிகளைப் பிடிப்பதாகத் தெரிவத்தினர். இவர்கள் சுமார் 1000 விவசாயிகள் 3000 ஏக்கர் காணியில் காடுகளை வெட்டி சேனைச் செய்கைக்கு தயார்படுத்தியுள்ளனர். எனினும் இவர்கள் அத்துமீறி தயார்படுத்தியுள்ள காணிக்கு சமமானதும் சேனைச் செய்கைக்கு உகந்த காணிகள் அம்பாறைப் எல்லைப்பகுதியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த அத்து மீறல் செயற்பாட்டினால் இம்மாவட்ட்தின் பெரும்போகச் செய்கையின் போது பாரம்பரியமாக கால்நடைகளை கொண்டு செல்லும் மேய்ச்சல் தரைகள் அபகரிக்கப்படுகின்றன. இதனால் இம்மாவட்டத்தில் செய்கை பண்ணப்படும் ஒரு இலட்சத்தி 56 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்படுகின்றது.
இதனைக் கருத்திக் கொண்டு இவ்வத்துமீறல்காரர்களின் செயற்பாடுகளை உடனடியாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களை மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கேட்டுக் கொண்டார். இருப்பினும் அவர்கள் தமது செயற்பாட்டினை தொடர்வதை அவதானிக்க முடிந்தது. இதேவேளை இவ்விடயம் தொடர்பாக அனைத்து பாரளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு தற்போதைய நிலைமை தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கவுள்ளதுடன் நாளை (13) இடம்பெறவுள்ள கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படவுள்ளது.
இக்களவிஜயத்தின்போது காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் என். வில்வரட்னம், மகாவலி அதிகார சபை உத்தியோகத்தர்கள், அப்பிரதேசங்களுக்கான கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரசன்னமாயிருந்தனர்.
0 Comments:
Post a Comment