மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் இறால் மற்றும் மீன் வளர்ப்பு திட்டங்களை அரச காணியில் ஆரம்பிப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் செவ்வாய்கிழமை(13) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இறால் செய்கை பண்ணப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட இப்பகுதியானது இறால் மற்றும் நன்நீர் மீன் வளர்ப்பிற்கு உகந்த இடம் என ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையினால் (நெக்டா) ஏற்பாட்டில் முதலைக்குடா மற்றும் மகிழடித்தீவிலுள்ள சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டத்தினை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கடந்த காலங்களில் இறால்வளர்ப்புத் திட்டத்தினை முறையாக மேற்கொள்ளாததால் அப்பிரதேச மக்களின் குடிநீர் மற்றும் விவசாய நிலங்கள் உவர்நிலை அடைந்துள்ளதாகவும் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் மற்றும் பொது அமைப்புக்கள் சார்பில் விசனம் தெரிவிக்கப்பட்டது.
தற்பொழுது நவீன முறையில் மேற்கொள்ளப்படவிருக்கும் இத்திட்டத்தினூடாக சுற்றாடலுக்கும் மக்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்து கொள்ளவும், அவ்வாறு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ந்து கொள்வதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பரிந்துரை செய்வதற்குமான விசேட நிபுனர்குழுவொன்று காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினது அறிக்கையின் பிரகாரம் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மாங்களை இவ்வுயர்மட்டக்குழு எடுக்கவுள்ளது.
இவ்வுயர் மட்டக் கலந்துரையாடலில் பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்கிவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், இரா.சாணக்கியன் மற்றும் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை பணிப்பாளர் நாயகம் நிமல் சந்திராரட்ன உள்ளிட்ட பல திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், விவசாய அமைப்பு மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
0 Comments:
Post a Comment