சதியினை மதியால் வெல்ல மக்கள் ஒத்துழைக்க வேண்டும் – இரா.சாணக்கியன்.தமிழ் தேசியத்தை காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாக்குகளை சிதறடிக்காது சிந்தித்து மக்கள் அனைவரும் செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் தேசியத்தினை சிதைக்கும் நோக்கில் தற்போது வடக்கு கிழக்கில் அதிகளவான கட்சிகளும், சுயேற்சைக் குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக தொடர்ந்தும் வசைபாடி, கூட்டமைப்பின் வாக்குகளை சிதைக்க வேண்டும் என்பதே இவர்களின் ஒரே இலக்காக காணப்படுகின்றது.
கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் எம்மை தொடர்ந்தும் விமர்சிக்கிறனர். எனினும் அவர்கள் கடந்த காலங்களில் எப்படி செயற்பட்டார்கள் என்பதற்கு அப்பால், அவர்களின் எதிர்கால இலக்கு பற்றி தொடர்ந்தும் மௌனம் சாதிக்கின்றனர். அவர்களின் ஒரே இலக்கு கூட்டமைப்பிற்கு மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதேயாகும்.
இதனை எம்மை விமர்சிப்பவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தனித்து செயற்படுவதன் ஊடாக சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியுமே தவிர, தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுவிட முடியாது.
கடந்த காலங்கைளைப் போன்று அதிகளவான கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இம்முறையும் நாடாளுமன்றம் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் மாத்திரமே எமக்கான உரிமைகளை எம்மால் பேரம் பேசி பெற்றுக்கொள்ள முடியும்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே நிச்சயமாக அவர்களினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்றுக்கொள்ள முடியாது.
எனவே நாம் நிச்சயமாக இம்முறை நாடாளுமன்றத்தில் பேரம் பேசும் சக்தியாக இருப்போம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதனை இவ்விடத்தில் உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment