18 Jun 2020

மட்டக்களப்பு கிரான் பாலத்தை மீள் புனரமைப்பு செய்து தரவேண்டும். பொதுமக்கள் கோரிக்கை.

SHARE
மட்டக்களப்பு கிரான் பாலத்தை மீள் புனரமைப்பு செய்து தரவேண்டும். பொதுமக்கள் கோரிக்கை.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர்  பிரிவிற்குட்பட்ட கிரான் பாலத்தை மீள் புனரமைத்து தரும்படி பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் கோரிக்கை முன் வைக்கின்றார்கள்.

கிரான் பாலமானது 1972 ஆம் ஆண்டில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட  ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் கே.டப்ளியு.தேவநாயகம் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பாலம் கட்டப்பட்டதாகும். அதன் பின்னர் கிரான்பாலத்தை புணரமைப்பதற்கு பலர் அடிக்கல் நாட்டப்பட்டும் பாலத்திற்கான வேலைகள் இடம்பெறவில்லை. இறுதியாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் (கருணா அம்மானால்) நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிரான்பாலம் கட்டப்பட்டு 48 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இதுவரையும் அதனை புணரமைப்பதற்கு உகுரிய முன்னாயர்த்த நடவடிக்கையை யாருமே எடுக்கவில்லை. கிரான் பாலம் தற்போது தூர்ந்துபோய் கவனிப்பாரற்று காணப்படுகின்றது. மழை காலத்தில் கிரான் பாலத்தின் மேலாக சுமார் 8 அடிக்கு மேல் வெள்ளநீர் மேவிப்பய்வது வழக்கம். இதனால் 15,000 மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தினால் வருடாற்தம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சுமார் 25 இற்கு மேற்பட்ட கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் விவசாயம், உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு இப்பாலத்தின் ஊடாகவே பொதுமக்கள் போக்குவரத்து செய்து வருகின்றார்கள். இவ்வாறான வெள்ள நிலைமையின் போது பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

கிரான், புலிபாய்ந்தகல், பொண்டுகச்சேனை, மியாங்குளம்  போன்ற வீதிகளை ஊடறுத்துச் செல்லும் கிரான் பால வீதியானது நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் மிக மோசமான நிலையில் காணப்படுவதனால் இப்பகுதியில் தொடர்ச்சியான விபத்துகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கடந்த காலத்தில் பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கைகள் முன்வைத்த நிலையிலும் யாரும் கவனம் செலுத்தவில்லையெனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பாதை கிரானில் இருந்து படுவான்கரைக்கு செல்லும் முக்கிய பாதையாகவுள்ள நிலையிலும் யுத்தம் நிறைவடைந்து இதுவரையில் சீரமைக்கப்படாத நிலையிலேயே உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு வாகனங்கள் சமாந்தராமாக செல்ல முடியாத நிலையில் உள்ள இந்த பாலத்தில் அடிக்கடி விபத்துகளை எதிர்கொள்வதாகவும் இந்த பாதையினை கிழக்கு மாகாண ஆளுநர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், கிரான் பிரதேச செயலாளர் கவனத்தில் கொண்டு திருத்தியமைக்க முன்வரவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






SHARE

Author: verified_user

0 Comments: