கிழக்கில் பிரிந்து சென்று தேர்தலில் போட்டியிட மாட்டோம்.அனைத்து தமிழ்கட்சிகளுடன் ஒன்றிணைந்து போட்டியிட்டால்தான் பாதிக்கப்பட தமிழ்சமூகத்தை தலைநிமிர வைக்கலாம் என்று முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தெரிவித்தார்.
அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்..
எதிர்வரும் தேர்தலில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கிழக்கு மாகாணத்திலும் மற்றும் வடக்கில் யாழ்ப்பாணம் தவிர்ந்த வன்னித் தேர்தல் மாவட்டத்தில் வியூகம் வகுத்து களமிறங்கி வெற்றிபெற தீர்மானித்துள்ளோம். கிழக்கு மாகாணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து இத்தேர்தலை எதிர்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கிழக்குத் தமிழர் ஒன்றியம், கிழக்கு தமிழர் கூட்டமைப்பு, அரச தேசியக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. அனைத்து கட்சிகளும் தமிழ்மக்களின் நலனுக்காக எங்களுடன் இணைந்து செயற்படுங்கள். பிரிந்து சென்று தனித்தனியாக போட்டியிட்டால் மாற்று சக்திகளுக்குதான் பலமாக இருக்கும். இதனை தமிழ்கட்சிகள் ஆழமாக சிந்திக்கனும். குறிப்பாக பொதுஜன பெரமுன கட்சி அதனுடன் இணைந்து தேர்தலில் களமிறங்க எம்மிடம் தொடர்பு கொண்டு ஆலோசித்து வருகின்றார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் வேட்பாளர் எவரையும் நியமிக்காவிட்டால் அக்கட்சியுடன் இணைந்து தேர்தலில் ஈடுபட முடியும் என ஆணித்தரமாகத் அவர்களுக்கு தெரிவித்துள்ளோம். எதிர்வரும் நாட்களில் எமது மத்திய குழு மீண்டும் கூடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். கிழக்கில் பிரிந்து சென்று தேர்தலில் போட்டியிடமாட்டோம். அனைத்து தமிழ்கட்சிகளுடன் ஒன்றிணைந்து போட்டியிட்டால்தான் கிழக்கை பாதுகாக்கலாம். எமது செயற்குழு கூட்டத்தில் தான் எமது இறுதி முடிவினை அறிவிப்போம். தற்போதைக்கு எமது கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய பிரதான வேட்பாளர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்தமூர்த்தி மற்றும் விஜயவதி முரளிதரன் ஆகியோர் எமது மத்திய குழுவினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிக்கின்றார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர் தெரிவுகள் மேற்கொள்ளப்படவில்லை. நான் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளேன். திருகோணமலை மாவட்டத்திலும் வேட்பாளர் தெரிவு விடயங்கள் மேறகொள்ளப்பட்டு வருகின்றன. திருகோணமலை மாவட்டத்தில் கூடுதலாக பெண்களுக்கு முன்னுரிமை டுத்து பெண்களை கௌரவப்படுத்துகின்றோம். வன்னி மாவட்டத்தில் முன்னாள் போராளிகள், பெண்கள் மற்றும் அவர்களின் உறவுகள் என்ற ரீதியில் எமது வேட்பாளர் தெரிவுகள் இடம்பெறும். எமது தெரிவுகள் ஒவ்வொன்றும் போராளிகளையும், பெண்களையும் அல்லது போராளிகள் குடும்பங்களை மையப்படுத்தியதாக இருக்கும்.
இன்று தமிழ்த் தேசியம் பேசும் சம்பந்தன் ஐயாவின் கட்சியும், சீ.வி விக்கினேஸ்வரனின் கட்சியும் தமிழ்மக்களின் விடிவுக்காகவும் இருப்புக்காகவும் போராடிய போராளிகளையும், பெண்களையும் புறந்தள்ளி இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு போராளியைக் கூட வேட்புமனுவில் உள்வாங்குவதற்கு முயற்சியெடுக்கவில்லை. தமிழ்மக்களின் விருப்புக்கு மாறாக செயற்படும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இன்று தமிழ்மக்களையும், முன்னாள் போராளிகளையும் அவமதித்து இன்று செமற்படுகின்றது. எனவே எமது போராளிகளின் துன்ப துயரங்களை நீக்குவதற்காக அவர்கள் மத்தியில் இருந்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதே எமது கட்சியின் நோக்கமாகும்.
கிழக்கு மாகாணத்திலே பிரிவுகள் எற்படுவதற்கு நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் பிரிந்து நின்றால் அது வேறு சக்திகளுக்குத் தான் வாய்ப்பாக அமையும். எனவே ஒற்றுமைக்காகப் பல விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ளவும் நாங்கள் தயராக இருக்கின்றோம். அந்த அடிப்டையில் தான் ஆனந்தசங்கரியுடன் பல பேச்சுவார்த்கைளை நடத்தினோம். ஆனால் எவ்வித ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஆனந்தசங்கரி அவர்களின் கருத்துக்கள், செயற்பாடுகளின் காரணாக அதனை தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை. அவர் சிலர் விட்டுக் கொடுப்புகளுடன் முன்வந்தால் அதனுடன் இணைந்து போவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு எதுவித சேவையும் செய்யவில்லை. எந்த உரிமையையும் காப்பாற்றவில்லை. மாறாக நிலங்களையும், நிருவாக, அபிவிருத்திகளையும் நாங்கள் பறிகொடுத்துள்ளோம். அதற்காக அவர்கள் குரல் கொடுக்கவும் இல்லை. எல்லைப்புற மக்களை அவர்கள் கணக்கில் எடுப்பதும் இல்லை. தமிழ்மக்களுக்கு எதிராக பல தேசத்துரோகங்களை தமிழ் மக்களுக்கு செய்தவர்களை கூடயெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்கள் கட்சியில் இன்று வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கின்றனர். இதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரையில் எதுவித பிரயோசனமும் இல்லாத கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களால் பார்க்கப்படுகின்றது. தற்போது வேட்பாளர் தெரிவில் கூட பல துரோகங்களைச் செய்தவர்களையெல்லாம் தங்கள் கட்சியில் நிறுத்தியிருக்கின்றார்கள்.
பட்டிருப்பு தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளராக செயற்பட்டவரையும், ஐக்கிய தேசிய கட்சிக்கு வாழ்பிடித்து மீண்டும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளாதாகவும் விருப்பம் தெரிவித்த ஒருவரையும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் களம் இறக்கியிருக்கின்றார்கள். தமிழர்களின் பிரச்சனைக்கு பாராளுமன்றத்திலோ அல்லது வேறு இடத்திலோ குரல்கொடுக்க தெரியாதவர்கள், தமிழ்தேசியம் என்றால் என்ன? என்று புரியாதவர்கள்?, தமிழ்மக்களின் போராட்டத்திற்கு சிறு பங்களிப்பு செய்யாதவர்கள், போலித்தேசியம் பேசி தமிழ்மக்களினால் புறக்கணிக்கப்பட்ட யோகேஸ்வரன், ஸ்ரீநேசனையும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு களமிறக்கியுள்ளார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர்களை தெரிந்தெடுப்பதில் வீடுவீடாக சென்று ஆள்புடிக்கும் அளவுக்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சியாக தமிழ் தேசியகூட்டமைப்பு இருக்கின்றது. இவ்வாறானவர்களை நிறுத்திக் கொண்டு எவ்வாறு தமிழ்த் தேசியம் பேச முடியும். அந்தளவிற்கு வேட்பாளர் பற்றாக்குறை நிலவுகின்ற ஒரு கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற்றமடைந்திருக்கின்றது. எனவே தேசியம் தேசியம் என்று பேசிக்கொண்டு மக்களை இன்னமும் ஏமாற்றக் கொண்டிருப்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பின்னால் அணி திரள வேண்டும் என்று தெரிவித்தார்
0 Comments:
Post a Comment