(காந்தன்)
மட்டக்களப்பில் கொரோனா தொற்றை குறைக்க பொலிசாருடன் இணைந்து செயற்பட்ட ஊடகவியலாளர்கள்.
கொரோனா வைரஸ் பொதுமக்களிடையே பரவுவதை தடுக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகளை நாடு பூராகவும் மேற்கொண்டுவரும் நிலையில் மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசாரும் மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கின் சிறகுகள் அமைப்பும் இணைந்து கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் முகமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமை (20) மட்டக்களப்பு மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டனர்.
இதன் முதல் நிகழ்வானது மட்டக்களப்பு புகையிரத நிலைய வளாகத்தில் மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பி.பி.ஏ.சரத் சந்திரா மற்றும் மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கே.கிரிசுதன் உட்பட புகையிரத நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கலென பலரும் கலந்துகொண்டு புகையிரத நிலைய வளாகம் மற்றும் புகைவண்டி ஆகியவற்றிற்கு தொற்றுநீக்கி திரவம் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகர்பகுதிகளில் பிரயாணத்தினை மேற்கொண்ட பொதுமக்கள் மற்றும் பஸ்களில் பயணித்த பயணிகளின் நலனில் கருத்திற்கொண்டு மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசாரும், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கின் சிறகுகள் அமைப்பு ஆகியன இணைந்து விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்களை வழங்கியதுடன், மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கையினையும் மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தனியார் பேருந்து நிலையம் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு சென்று அதன் நிருவாகிகளை தெளிவுபடுத்தியதுடன், அங்கு வருகைதந்திருந்த வாடிக்கையாளர்களையும் தெளிவுபடுத்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment