மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர மகளிர் தேசிய பாடசாலை, சிசிலியா மகளிர் தேசிய பாடசாலை ஆகிய முன்னணி பாடசாலைகளுக்கிடையில் இடம்பெறவுள்ள பாடுமீன் பெருஞ்சமர் கிரிக்கட் சுற்றுப் போட்டி தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (11) மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பை ஆரம்பிக்கும் முகமாக இரு பாடசாலைகளுக்கிடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் சிசிலியா கல்லூரி மாணவிகளின் பேன்ட் வாத்தியத்தோடு வின்சன்ட் உயர்தர மகளிர் தேசியப் பாடசாலை மாணவர்களை நட்புறவுடன் வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.இந் நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. மங்கள விளக்கினை மக்கள் வங்கியின் கணக்காளர் திருமதி பிரேமினி மோகன் ராஜ், வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் அதிபர் திருமதி ரி. உதயகுமார், சிசிலியா கல்லூரியின் அதிபர் அருட் சகோதரி நித்தஞ்சலி, மாணவர் சங்கத் தலைவர், பழைய மாணவர் சங்கத் தலைவர் மற்றும் இரு அணிகளினதும் தலைவர்கள் என்போர் ஏற்றி வைத்தனர்.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் சிசிலியா கல்லூரியின் அதிபர் அருட் சகோதரி நித்தஞ்சலி கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தேசிய பாடசாலைகளுக்கிடையே மிகவும் ஒரு நல்லுறவை கட்டியெழுப்புவதற்காக இந் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வு கடந்த பத்து வருடங்களாக இடம் பெற்று வருகின்றது. இந் நிகழ்வின் முக்கிய நோக்கமானது மாணவிகளுடைய வளர்ச்சி மற்றும் புதைந்து கிடக்கின்ற திறமைகளை வெளிக்கொணர்வதற்காகவும் இக் கிரிக்கட் போட்டி நடத்தப்படுகிறது.
இந் நிகழ்வால் இரு பாடசாலைகளுக்கிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்படக்கூடிய நிலமை ஏற்பட்டிருக்கின்றது. இரண்டுமே தேசியப் பாடசாலைகள் . இங்கே இந்த தேசியப் பாடசாலை மாணவர்கள் இவ்வாறு செயற்படுவது ஏனைய மாவட்டங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என நம்புகின்றேன். இரண்டு பாடசாலைகளின் மாணவர்கள் நட்புணர்வுடன் பழகிக் கொள்வற்கும் இந்த இருபதுக்கிருபது போட்டிகள் மாணவிகளை மட்டுமல்லாது இரண்டு பாடசாலை சமூகத்தையுமே ஒற்றுமைப்படுத்துகின்றது.
இக் கிறிக்கட் சமர் கடந்த பத்து வருடமாக இடம் பெற்று வருகின்றது. ஆகவே இரண்டு பாடசாலைகளுக்குமிடையில் இப்படியானதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி நடாத்துவதை முன்னிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைவதோடு நாம் இரண்டு பாடசாலைகளும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சிறுவயதிலிருந்து நல்லதொரு பண்பாடான சமுதாயம் உருவாவதற்கு நாம் உதவுவோம் எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து வின்சன்ட் மகளிர் உயர்தர தேசியப் பாடசாலை அதிபர் கருத்து தெரிவிக்கையில் இரு பாடசாலைகளுக்குமிடையில் நல்லுறவை பேணும் வகையில் இக் கிறிக்கட் சுற்றுப் போட்டி இடம்பெறவிருக்கின்றது. சிசிலியா கல்லூரியின் அதிபரும் நானும் புதிதாக கடமையேற்றுக் கொண்டிருக்கின்றோம். இந் நிகழ்வு கடந்த பத்து வருடமாக மிகச் சிறப்பாக சினேக பூர்வமாக இடம் பெற்று வருகின்றது. இங்கு போட்டி என்று சொல்வதை விட சினேக பூர்வம் என்றுதான் சொல்ல வேண்டும்.
கடந்த பத்து வருடங்களில் ஐந்து வருடங்கள் புனித சிசிலியா கல்லூரியும் நான்கு வருடங்கள் எமது பாடசாலையும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு வெற்றியீட்டுவது முக்கியமல்ல. இரு பாடசாலைகளுக்குமிடையே உள்ள புரிந்துணர்வு என்பதுதான் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வருடம் எந்தக் கல்லூரி வெற்றி பெறுகின்றது முக்கியமல்ல. இங்கு அனைவரும் எதிர் பார்த்திருப்பது இரு பாடசாலைகளுக்குமிடையே இடம் பெறவிருக்கின்ற மாபெரும் சமரே.
இந் நிகழ்விற்கு இரு பாடசாலைகளினதும் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு, மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலை நலன் விரும்பிகள், ஆசிரியர்கள் இனைவும் பின்புறம் நின்று உந்து சக்தியாக இந்த நிகழ்வு இடம் பெறுவதற்கு உதவி புரிகின்ற அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். இந் நிகழ்வு எதிர் வரும் 15ம் திகதி எந்தவித தடையுமின்றி சகல வீராங்கணைகளும் சிறப்பாக விளையாட வேண்டும் என வாழ்த்துகின்றேன் எனக் குறிப்பிட்டார். இந்த சமர் 20 ஓவர் கொண்டதாக மென்பந்து கிறிக்கெற் போட்டியாக இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment