19 Mar 2020

பொதுத் தேர்தல் 2020 இற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளினதும், 3 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

SHARE
(ஜதுர்சயன்) 

பொதுத் தேர்தல் 2020 இற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளினதும், 3 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பொதுத் தேர்தல் 2020 நடைபெறவிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக, இறுதித் தினமாகிய இன்று நன்பகல் 12 மணிவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள மொத்த வேட்புமனுக்கள் 44 இல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகள் 3 இனதும், சுயேச்சைக் குழுக்கள் 3 இனதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, மௌபிம ஜனதா பக்ஸ, ஜனசத பெரமுன ஆகிய 3 அரசியல் கட்சிகளும், அரசரெத்தினம் யுகேந்திரன், பி. மதிமேனன், மு.அ.நிசார்தீன் ஆகியோர் தலைமையிலான 3 சுயேச்சைக் குழுக்களுமே நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமாகிய திருமதி.கலாமதி பத்மராஜா தெரிவித்தார். 

வேட்புமனு ஏற்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இக்கருத்தினை அவர் தெரிவித்தார். இதனடிப்படையில் 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 22 சுயேச்சைக் குழுக்களுமாக 38 குழுக்கள் இத்தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளன.

மேலும் அவர் கருத்து வெளியிடுகையில் வேட்பு மனுக்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சத்தியப் பிரமானம் சமர்ப்பிக்கப்படாமை, வேட்பு மனுவில் எட்டு அபேட்சகர்களது பெயர் குறிப்பிடப்பட வேண்டியவிடத்து 7 அபேட்சகர்களது பெயர்கள் மாத்திரம் குறிப்பிட்டமை போன்ற காரணங்களுக்காகவே இவ்வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டதுடன் சுயேச்சைக் குழுக்களுக்கான சின்னங்களும் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவத்தார். இச்செய்தியாளர் மாநாட்டில் உதவி தெரிவத்தாட்சி அலுவலர் ஆர்.சசீலனும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 




SHARE

Author: verified_user

0 Comments: