மாவட்டத்தில் கல்வியில் எடுத்துக்காட்டாய் விளங்கும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்.
வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதரப் உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கலைத்துறையின் சாதனையாளர்கள் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மாணவர்களே.
வசதிவாய்ப்புக்கள் அற்றும், ஆளணிப் பற்றாக்குறைகளுடனும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் இயங்கினாலும், வசதி, வாய்ப்புக்களுடன் இருக்கும் கல்வி வலயங்களைவிட சிறந்த முதல்தர பெறுபேறுகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்ட தமிழர்களின் பெருமையை இம்மாணவர்களே பறைசாற்றியுள்ளனர்.
புதிய பாடத்திட்டத்திற்கு அமைய, கலைத்துறையில் மாவட்டத்தின் முதல் இரு நிலைகளையும் காத்தான்குடி தேசிய பாடசாலையான மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொள்ள மூன்று, நான்கு, ஐந்தாம் நிலைகளை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கஸ்டப்பிரதேச பாடசாலைகள் பெற்று மாவட்டத்தின் பெருமையை தக்கவைத்து சாதனை படைத்துள்ளனர்.
இதற்கமைய, அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய மாணவி ஜீவரெத்தினம் கல்கியமுது. 3ஏ சித்திகளைப் பெற்று , மாவட்டத்தில் 03 ஆம் இடத்தினையும், மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலய மாணவி சிவலிங்கம் மிதுசா 3ஏ சித்திகளைப் பெற்று 4 ஆம் இடத்தினையும், கரடியனாறு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கலைப்பிரிவில் தோற்றிய மாணவி சாந்தலிங்கம் டிலுக்சி 3ஏ சித்தி பெற்று மாவட்டத்தில் 5 ஆம் இடத்தினையும் பெற்று சாதித்துள்ளனர்.
இதேபோன்று வர்த்தக்கத்துறையில், முதலைக்குடா மகா வித்தியாலய மாணவன் கருணாநிதி விதுர்சன் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினையும், தேசிய ரீதியில் 194 ஆவது இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அதே போன்று நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவி சத்தியலிங்கம் சனுசியா கலைப்பிரிவு பழைய பாடத்திட்டத்தில் மாவட்ட ரீதியில் 02 ஆம் இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் 249 இடத்தினையும் பெற்றுள்ளார்.
இதன்மூலமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மாணவர்கள் திறமையானவர்கள், அவர்களுக்கான வசதி, வாய்ப்புக்களும், ஆசிரிய வளங்களும், முறையான திட்டமிடலும், வழிகாட்டல்களும் கிடைக்கப் பெறுகின்ற போது அவர்கள் தேசிய ரீதியில் அதிக சாதனைகளை புரிவர் என்பதனை வெளிக்காட்டி நிற்கின்றது. வெறுமனே மாகாணசபை பாடசாலைகளை மாத்திரம் கொண்டமைந்த இவ்வலயத்தில் தேசிய பாடசாலைகள் எதுவுமே இல்லாத நிலையிலும், தேசிய பாடசாலைகள் புரிய சாதனையை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் புரிந்துள்ளமை வரலாற்றுச் சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment