மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் கடமையில் ஈடுபட்ட ஒரு கல்வி வலயத்தைச் சேர்ந்த உத்தியோகஸ்த்தர்களுக்கு இற்றைவரை கொடுப்பனவு வழங்கப்படவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் கடமையில் ஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவு மாவட்டத்தில் உள்ள ஒரு வலயக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த உத்தியோகஸ்த்தர்களுக்கு இற்றைவரை வழங்கப்படவில்லை. தேர்தல் கடமைக்கு சென்ற உத்தியோகத்தர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து இரண்டு மாதமும், ஐந்து நாட்களும் கடந்துள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்கியுள்ள நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் கல்விப் பகுதியிலிருந்து ஈடுபட்ட உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு இற்றைவரையும் வழங்கப்படவில்லை என தேர்தல் கடமையில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் மிகுந்த கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டிலே நடைபெறுகின்ற விசேடமான கடமைகளில் தேர்தல் கடமையும் ஒன்றாகும். இந்நிலையில் கடந்த காலங்களில் தேர்தல் முடிவடைந்து ஓரிரு வாரங்களில் அவற்றுக்குரிய கொடுப்பனவு மாவட்டத்தில் உள்ள சகல திணைக்களங்களினாலும் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தன. பல திணைக்களங்கள் உத்தியோகஸ்த்தர்களுக்கு, தேர்தல் நடைபெற்ற அதேமாதமே கொடுப்பனவை வழங்கியிருந்தார்கள் தற்போதும் அநேகமான திணைக்களங்களில் இக்கொடுப்பனவு வழங்கப்பட்டிருக்கும் நிலையிலும், கல்வித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு கல்வி வலயத்தைச் சேர்ந்த உத்தியோகஸ்த்தர்களுக்கு மாத்திரம் இக்கொடுப்பனவை உரிய காலத்தில் இதுவரையில் வழங்கப்படவில்லை.
மாவட்ட தேர்தல் நடவடிக்கைகள் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களின் நேரடி அவதானிப்பின் கீழ் இடம்பெற்றிருந்தது. சிரேஸ்ட தலைமை தாங்கும் அதிகாரிகள், கனிஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகஸ்தர்கள், வாக்கெடுப்பு நிலையத்தில் கடமையாற்றிய ஏனைய உத்தியோகஸ்தர்கள், என பலர் கடமையாற்றினார்கள். இக்கடமைகளை அனைத்து உத்தியோகத்தர்களும் செவ்வனே நிறைவேற்றிக் கொடுத்திருந்தார்கள். இருப்பினும் அதற்குரிய கொடுப்பனவு விடயத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் துரிதமான நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவாக எதிர்வரும் காலங்களில் இடம்பெறப்போகும் தேர்தல் கடமைகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் அக்கடமைகளில் உத்தியோகத்தர்கள் ஈடுபடுவதற்கான விருப்பம் இன்றிப் போவதற்கும், இக்கடமையின் பெறுமானமும் மலினப்படுத்தப் படுவதற்கு ஏதுவான நிலையினையும் தோற்றுவிக்க கூடுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டுவதோடு, கவலையும் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் தமது கல்வி வலயத்தைச் சேர்ந்த கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கடமைபுரிந்த ஆசிரியர்கள், உள்ளிட்ட உத்தியோகஸ்த்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு விபரங்கள் அனைத்தும் நாம் தேர்தல் திணைக்களத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளோம். அங்கிருந்து எமக்கு இதுவரையில் எதுவித பதிலும் வரவில்லை என உரிய வலையக் கல்வி அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment