மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பன்மைத்துவத்தைப் புரிந்து கொண்டு பணியாற்றினால் நிரந்தர அமைதியையும் அபிவிருத்தியையும் கொண்டுவரலாம் - முகாமைத்துவ ஆலோசகர் ஜே. பெனடிக்ற்.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட பன்மைத்துவம் தொடர்பான பயிற்சி நெறி மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை 08.12.2019 இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி, ஏறாவூர் நகர சபைகள், ஏனைய பிரதேச சபைகள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய முகாமைத்துவ ஆலோசகர் பெனடிக்ற், பன்மைத்துவம் தொடர்பான கருத்துக்கள் 1920ஆம் ஆண்டளவில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆயினும் நாம் இப்பொழுது அத்தகைய சகவாழ்வும், அபிவிருத்தியும், அமைதிக்குமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு சுமார் 100 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் இன்னமும் அதனை சீர்தூக்கிப் பார்க்க முயலவில்லை.
அழிவுகள் வந்தடைந்த பின்னர்தான் தீர்வுகளை தனித்தனியாகத் தேடுவது நமது வழக்கமும் பழக்கமுமாகி விட்டது.
வருமுன் காப்போம் என்பது நோய்க்கும் பொருந்தும் மனிதனால் ஏற்படுகின்ற அழிவுகளுக்கும் பொருந்தும். இயற்கை இடர்களுக்கும் பொருந்தும்.
இடராயத்தம் மேற்கொள்வது பல்லின மக்கள் வாழ்கின்ற மட்டக்களப்பிலும் முழு இலங்கையிலும் பன்மைத்துவம் என்பது புரிந்து கொள்ளப்படுதல் வேண்டும்.
மற்றெல்லாப் பாத்திரங்களையும் வகிப்பவர்களைவிட மக்கள் பிரதிநிதிகாளகிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பன்மைத்துவத்தைப் பேணிப் பாதுகாத்து மக்கள் மனதில் மதிப்பையும் உயரிய அந்தஸ்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
காலாகாலமாக அந்நியப்பட்ட சிந்தனைகளில், முரண்பாட்டு மனப்பாங்குகளில் செயலாற்றி வந்து பழக்கப்பட்ட நமக்கு அடுத்த சமூகத்தவர் சார்பாக ஆதரவு தெரிவிப்பதற்கும் அந்தஸ்தை வழங்குவதற்கும் முடியாமலுள்ளது.
இது ஒரு சவால் நிறைந்த பணி, ஆனாலும் சவால்களை எதிர்கொண்டு இப்பணியை திறம்பட செய்து முடிப்பதே உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் அர்ப்பணிப்பாக இருக்க வேண்டும்.
அதிகாரத்தின் மூலம், அடக்குமுறையின் மூலம் ஒருவர் இன்னொருவரை, ஒரு சமூகம் அடுத்த சமூகத்தை, ஒரு நாடு மற்றொரு நாட்டை ஆக்கிரமிப்புச் செய்கின்றபோது அங்கே பன்மைத்துவம் இல்லாமற் போய் அபிவிருத்திக்குப் பதிலாக அழிவுகளே மிஞ்சும்.
முக்கியமாக இவ்வாறான சந்தர்ப்பித்தில் இயற்கை வளங்களும் மனித வளங்களும் அழிவது ஈடு செய்ய முடியாத நாசமாக அமைந்து விடும்.
அடுத்தவர்கள் அவர்கள் எந்த மொழி, சாதி, சமய, கலாசார வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் பன்மைத்துவ தத்துவ அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் அவர்களது நலனில் அந்தஸ்துடன், ஆதரவளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் வீட்டிலும், கிராமங்களிலும், பிரதேசத்திலும், நாட்டிலும் நல்லிணக்கமும், அமைதியும், அபிவிருத்தியும், அச்சமின்றிய வாழ்வும் ஏற்படும்” என்றார்.
0 Comments:
Post a Comment