இயற்கை வழி நீர் வடிந்தோடுவதைத் தடுக்கக் கூடிய அனுமதியற்ற கட்டிடங்கள், மதில்கள் தகர்க்கப்படும் -கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்.
கிராமங்கள் நகரங்கள் எதிர்கொள்ளும் வெள்ளப் பாதிப்பைத் தடுக்கும் முகமாக இயற்கை வழி நீர் வடிந்தோடுவதைத் தடுக்கக் கூடிய அனுமதியற்ற கட்டிடங்கள், மதில்கள் என்பனவற்றைத் தகர்க்க வழிவகை செய்யப்படும் என கிழக்கு மாகாண ஆளுநரும் தொழிலதிபருமான அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை நேரில் சென்று கண்டறிந்து கொண்ட பின்னர் வெள்ளத்தினால் தமது இருப்பிடங்கள் சூழப்பட்ட மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
முன்னதாக சித்தாண்டி பிரதேசத்திற்கு புதன்கிழமை 25.12.2019 விஜயம் செய்த அவர் அங்கு மக்களுக்கு உலருணவு நிவாரணங்களையும் வழங்கி வைத்த பின்னர் மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டு உரையாற்றினார்.
தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த அவர், புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதியினால் நான் ஜனாதிபதியின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு இங்கு மக்கள் பணிக்காக வந்துள்ளேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உலர் உணவையும் இன்னபிற நிவாரணங்களையும் வழங்க ஏற்பாடுகளைச் செய்து அதனை மக்களுக்கு கிடைக்கச் செய்து கொண்டிருக்கின்றது.
இங்கு கள விஜயம் மேற்கொண்டபோது மக்கள் சார்பான பல பிரச்சினைகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.
அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் அதிகார மட்டத்தில் வெகு சீக்கிரத்தில் நடவடிக்கை எடுப்போம்.
அதேவேளை, காலாகாலமாக மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் வடிந்தோட முடியாமல் இயற்கை வழி நீரோட்டத்தைத் தடைப்படுத்தி சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருக்கும் கட்டிடங்கள், மதில்கள் என்பனவற்றை அகற்ற அதிகார மட்டத்தில் நாம் நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது.
எனக்கு தமிழ் மொழி தெரியாதது குறித்து நான் வருத்தமடைவதோடு அதனைக் கற்றுக் கொள்வதற்கு ரேமில்லாத குறையில் இருந்து கொண்டிருக்கின்றேன்.” என்றார்.
நத்தார் தினமான புதன்கிழமை சித்தாண்டி முருகன் ஆலய வளாக பாடசாலைக் கட்டிடத்தில் வைத்து சித்தாண்டிப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணப் பொதியும், ஆளுநர் நிதியின் கீழ் குழந்தைகளுக்கான பால்மா, அத்தோடு நுளம்பு வலையும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.சி.எம். சியாத் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் உடனிருந்தனர்.
0 Comments:
Post a Comment