வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட முறுத்தானை கிராம மக்களுக்கு வெள்ள நிவாரணம் அரச அதிபரால் அனுப்பி வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட முறுத்தானை கிராம சேவகர் பிரிவு மக்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரினால் சந்திவெளி ஊடாக திகிலி வட்டைக்கு திங்கட்கிழமை (23) நீர் வழிப்பாதைக்கான இயந்திரத்தில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அப்பிரதேசத்தில் வசிக்கின்ற மக்கள் அன்றாடம் போக்குவரத்தில் கடுமையான சிரமங்களை தொடர்ச்சியாக வெள்ள காலங்களில் அனுபவித்து வருவது குறிப்படத்தக்கது.
கிரான் பிரதேசத்திற்கு செல்லுகின்ற கிரான்பாலம் ஊடாக நீர் பெருக்கெடுத்து செல்வதால் அப்பாதை முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதிக்கான மக்கள் போக்குவரத்து இயந்திரப்படகுகள் மூலமாகவே சென்று வருகின்றனர்.
குறிப்பாக கோரா வெளி, குடும்பிமலை, முறுத்தானை, பூலாக்காடு, பிரம்படித்தீவு, வடமுனை, ஊத்துச்சேனை, பொண்டுகள்சேனை, வாகனேரி, புணானை, மேற்கு புலிபாய்ந்தகல் ஆகிய கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாபு தெரிவித்தார்.
திங்கட்கிழமை வரை வெள்ள அனர்த்தத்தினால் 7938 குடும்பங்களை சார்ந்த 30156 நபர்கள் கிரான் பிரதேச செயலகப்பிரிவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
நிவாரணப்பொருட்களை அனுப்பி வைக்கும் பணியில் அரச அதிபர் உதயகுமாருடன் மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலைய உதவிப்பணிப்பாளர் எ.எஸ்.எம் சியாத், பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மற்றும் மாவட்ட தகவல் அதிகாரி வ.ஜிவானந்தன், அனர்த்த முகாமைத்துவ உதவியாளர் ப.சயந்தன், கியுமெடிக்கா நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.நல்லசிங்கம் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
0 Comments:
Post a Comment