பிளாஸ்டிக் பொருட்களை மாநகர சபையினால் உருவாக்கப்பட்டுள்ள சேகரிப்பு நிலையங்களில் வழங்கி அதற்கான பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் - மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவன்.
பொதுமக்கள் தங்களால் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகர சபையினால் உருவாக்கப்பட்டுள்ள சேகரிப்பு நிலையங்களில் வழங்கி அதற்கான பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரினை மாசற்ற சூழலாகப் பேணும் நோக்கில் மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் மீழ் சுழற்சிக்கான சேகரிப்பு நிலையங்களை புதன்கிழமை (18) திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…
மாநகர சபை எதிர்நோக்கி வந்த கழிவகற்றல் பிரச்சனைகளை குறைக்கும் வகையில் இந்த நெகிழி (பிளாஸ்டிக்) மீழ் பாவனைக்கான சேகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் நீண்ட காலம் அழியாமல் இருப்பதால் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், நீண்ட காலம் பூமியில் நிலைத்திருக்கிறது.
பிளாஸ்டிக் உபயோகத்தினால், உயிரினங்களுக்கு மரபணு பாதிப்புகளை ஏற்படுத்துதல், நீர்நிலைகளை மாசுபடுத்துதல், மற்றும் நிலங்களை ஆக்கிரமித்து மழைநீர் நிலத்தடில் ஊடுருவதையும் தடுக்கிறது. ஒரு முறை மட்டும் உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு புதிய உணவு பொருளாக மாறி கடல்வாழ் உயிரினங்களின் சூழலியலைக் கூட மாற்றியமைக்கிறது.
சூழலியாளர்கள் கூற்றுப்படி ஒரு பிளாஸ்டிக் குடுவை மண்ணோடு மண்ணாக முற்றிலும் அழிந்துபோக 450 வருடங்களாவது ஆகுமாம். இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களில் 70 வீதமானவற்றை எமது மக்கள் மீழ் உபயோகமின்றி தூக்கி எறிகின்றார்கள் அல்லது எரித்து விடுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகளால் பல்வேறு பிரச்சனைகளை மாநகர சபையானது எதிர்கொண்டு வருகின்றது.
தற்போது ஆசிய மன்றத்தின் ஆதரவோடு கொக்ககோலா மற்றும் எக்கோ ஸ்பாக்லஸ் நிறுவனங்களுடன் இணைந்து மேற்படி நெகிழி (பிளாஸ்டிக்) மீழ் பாவனைக்கான சேகரிப்பு நிலையத்தினை அமைத்துள்ளோம் அதற்காக எம்மோடு இணைந்து பணியாற்றும் இந்நிறுவனங்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலைத்தேய நாடுகளில் குப்பைகளை கறுப்பு தங்கம் என்றே அழைப்பார்கள் ஏனெனில் அவற்றை தரம் பிரித்து மீழ் சுழற்சிக்குட்படுத்தினால் பலர் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதோடு பணம் சம்பாதிக்கவும் முடியும். ஆனால் துரதிஸ்டவசமாக எமது நாட்டில் தொழில்வாய்ப்பில்லை என்று அரச தொழிலை மாத்திரம் எதிர்பார்க்கும் பலர் இதனைக் கருத்திற்கொள்வதில்லை. அவர்கள் முன்வந்தால் பலருக்கு தொழில் வாய்ப்பினை வழங்கவும் முடியும்.
எதிர்காலத்தில் எமது மாநகரினை சுத்தமாக வைத்திருக்கும் நோக்கோடு நாம் மேற்கொண்டுவரும் திட்டங்களுக்கு பொது மக்களும் தமது பங்களிப்புகளைச் செய்ய வேண்டும்.
குறிப்பாக நீங்கள் பாவிக்கும் அல்லது உங்களது பகுதிகளில் காணப்படும் பிளாஸ்டிக் குவளைகளை சேகரித்து இத்தகைய சேகரிப்பு நிலையங்களில் வழங்குவதோடு உங்களுக்காக வழங்கப்படும் இலத்திரணியல் புள்ளி அட்டையில் அதற்குரிய வெகுமதிப் புள்ளிகளைப் பதிவு செய்து அப் புள்ளிகளுக்கு நிகரான பொருட்களைக் கொள்வனவு செய்து கொள்ள முடியும். முக்கியமாக இந்தச் செயற்பாட்டில் மாணவர்களும் தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட திருப்பெருந்துறை மற்றும் கல்லடிப் பகுதிகளில் அமைந்துள்ள மேற்படி பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் நிலையங்களின் திறப்பு விழாவில் ஆசிய மன்றத்தின் பிரதி வதிவிடப் பிரதிநிதி ஜோகான் றிபேட், கொக்ககோலா நிறுவனத்தின் விரிவாக்கல் பணிப்பாளர் லக்ஸான் மதுரசிங்க, மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஸ், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.கோகுலன் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment