10 Dec 2019

யார் பெரியவர் : மமதை கொள்வது ஏன்?

SHARE
- படுவான் பாலகன் -

யார் பெரியவர் : மமதை கொள்வது ஏன்?
பதவி ஆசை பலரை விட்டு வைக்கவில்லை. இதனால்தான் தாம் ஒரு பதவி பெற்றதன் பின்னர்  கடந்துவந்த பாதைகளையும், மனிதநேயத்தினையும் மறந்து விடுகின்றனர். பலரிடத்தில் யார் உயர்ந்தவர்?, தாம்தான் உயர்ந்தவர் என்ற மனநிலைப்போட்டி இருக்கத்தான் செய்கிறது. இதனை ஆணவம் எனவும் குறிப்பிடுவர். ஆணவம் கொண்டவர்கள் அழிவது உறுதி என்பது வரலாறுகள், புராணங்கள், இதிகாசங்கள் சொல்லும் உண்மை. எல்லோரும் ஆணவம் கொண்டவர்கள் இல்லை. தர்மரைப்போன்றவர்களும் இவ்வுலகிலே உயர்பதவியில் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களை பாராட்ட வேண்டும், வாழ்த்த வேண்டும். இதெல்லாம் இவ்வாறிருக்க, யார் பெரியவர் என்பது தொடர்பில் நாம் அறிந்தவகையில் அவதானிப்போம்.

தாம் உயர்ந்தவர்கள் என நினைப்பவர்கள்தான் மமதையுடன் திரிகின்றனர். உண்மையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாரும் உளரா? இல்லை. இறைவன் படைப்பில் எல்லோரும் மனிதர்களே. ஆனால் நமக்குள்ளே இருக்கின்ற மனித சமூகம் மதத்தால், இனத்தால், சாதியால், பணத்தால், பதவியால் தம்மை உயர்ந்தவர்கள் என எண்ணிக்கொள்கின்றனர். அவ்வாறான எண்ணம்கொண்டவர்களைத்தான் பலரும் தாழ்ந்தவர்கள் என கருதுவதுமுண்டு. இங்கு பதவியால், பணத்தால் தம்மை உயர்;ந்தவர்கள் என காட்டிக்கொள்பவர்கள் பற்றி சற்று பார்ப்போம்.

பதவியென்பது எதற்காக வழங்கப்படுவது, மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கே. அதற்காக மக்கள் உரிய பதவியில் உள்ளவர்களுக்கு கொடுப்பனவை வழங்குகின்றனர். மக்கள் வழங்கும் வரிப்பணமே இவர்களின் குடும்பத்தினை வழிநடத்துவதற்கான ஊதியமாக இருக்கின்றது. இதுதொடர்பில் இன்னமும் விரிவாக பார்க்கவேண்டியுள்ளதால் இன்னொரு கட்டுரையில் அதுபற்றி பார்ப்போம். மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற பிரதிநிதிகள் இருக்கின்றனர். இவர்களைவிடுவோம். இன்று புத்தக கல்வியினை பயின்று, பட்டம்பெற்று, பதவிநிலையில் இருக்கின்ற நிர்வாகசேவையை சேர்ந்தவர்கள், கல்வி நிர்வாகசேவையை சேர்ந்தவர்கள், வைத்தியர்கள், பொறியிலாளர்கள், சட்டத்தரணிகள் என பதவிகள் வகிக்கும் சிலர் தம்மை உயர்நிலை கொண்டவர்களாக கருதி அதிகாரப்போக்குடன் நடந்துகொள்வதும் சில இடங்களில் இருக்கத்தான் செய்கின்றன. எல்லோரும் அவ்வாறான குணம் கொண்டவர்கள் அல்ல. அவ்வாறான குணம் கொண்டவர்கள் சிலர் இருப்பதும் வேதனையானதே.

பதவி என்பதும், வேலைசெய்யும் இடம் என்பதும் நிரந்தரமில்லை. குறித்த காலத்தில் இடமாற்றம் பெறலாம். குறித்த வயதில்  ஓய்வுக்செல்லலாம். அது அவ்வாறிருக்க, மண்ணில் பிறந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் ஒருவரில் ஒருவர் தங்கியே வாழ வேண்டியுள்ளது. இந்த யதார்த்தை புரிந்துகொள்ளாதவர்கள்தான் மமதை கொண்டவர்களாக செயற்படுகின்றனர். உண்மையில், தாம் இருக்கின்ற பதவியை விடுத்து வேறொரு இடத்திற்கு செல்கின்ற போது, இன்னொருவரை எதிர்பார்த்துதான் நிற்க வேண்டியேற்படும். இருக்கின்ற கதிரையில் விட்டு எழுந்தால், இன்னொருவரைத்தான் நாம் எதிர்பார்க்க வேண்டி ஏற்படும். 

பேரூந்து ஒன்றில் ஏறிவிட்டால், அதனை ஓட்டும் சாரதிதான் எல்லோருக்கும் முக்கியமானவன், நாம் பயணிக்கும் வாகனம் பழுதடைந்தால் அதனை திருத்துனர்தான் அங்கு நமக்கு உயர்ந்தவன், வங்கிக்குச் சென்றால் வங்கி ஊழியர், வைத்தியசாலைக்கு சென்றால் வைத்தியசாலை ஊழியர்கள், வைத்தியர்கள், பாடசாலைக்கு சென்றால் பாடசாலை ஆசிரியர், அதிபர், சலூனுக்கு சென்றால் சலூன் உரிமையாளர், சந்தைக்கு சென்றால் வர்த்தகர், வர்த்தக நிலையங்களுக்கு சென்றால் வர்த்தகர்கள், உணவுக்கடைக்கு சென்றால் அக்கடை ஊழியர்கள், காவல்துறைக்கு சென்றால் காவல்துறை உத்தியோகத்தர்கள், உணவு உற்பத்திக்கு விவசாயிகள், வீடுகட்டுதலுக்கு மேசன் என ஒவ்வொருவரும் அந்தந்த இடங்களில் நமக்கு அவசியமானவனாக இருப்பான். அந்த இடத்தில் உயர்ந்தவனாகவும் இருப்பான். வீதியில் விழும் போது யாசகம் செய்பவன் தூக்கிவிடுபவனகவும் இருப்பான். உண்ணும் உணவில் இருந்து தங்கும் இடம், செய்யும்செயற்பாடுகள் பலவற்றிற்கும் இன்னொருவரிலேயே தங்கியிருக்கின்றோம். இந்த யாதார்த்தம் யாவருக்கும் தெரியும் ஆனால் கதிரையில் அமர்ந்துவிட்டபின் யாவற்றையும் மறந்துவிடுகின்றோம்.

உண்மையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் யாருமில்லை. சந்தர்ப்பங்கள்தான் யார் இந்தப்பொழுதில் அவசியமானவர் என்பதை புரியவைக்கிறது. அந்தப்புரிதலை உணர்ந்து கொள்பவர்கள் மனிதநேயத்துடன் நடந்துகொள்வர். மனிதநேயம் கொண்டவர்களாலையே மக்களை திருப்படுத்தும் சேவையை வழங்க முடியும். அவர்களே மரணித்தாலும் மனிதர்கள் மனங்களில் இடம்பிடிப்பர். இதனை உணர்ந்து செயற்பட வேண்டியது, மிருககுணங்களைக் கொண்ட சில மனிதர்களின் பண்பாகும். 

SHARE

Author: verified_user

0 Comments: