மட்டக்களப்பில் தொடர் மழை தாழ் நிலங்கள் வெள்ளத்தில் போக்குவரத்தும் இஸ்த்தம்பிதம்.
தொடர்ந்து பெய்துவரும் அடைமழையால் மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு நிலையிலும் சற்று தழம்பல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதனால் சில போக்குவரத்து வீதிகளிலும் மழை நிர் ஊடறுத்துப் பாய்வதனால் பிரயாணிகள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனைவிட மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
படுவாங்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெல்லாவெளி, கோவில்போரதீவு, பொறுகாமம், மற்றும் பழுகாமம், போன்ற இடங்களிலுள்ள குளங்கள் நிரம்பியுள்ள இந்நிலையில் உறுகாமம், உன்னிச்சை, நவகிரி, மற்றும் கடுக்காமுனைக்குளம் உள்ளிட்ட பெரிய குளங்களின் நிர்மட்டமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வெல்லாவெளி – மண்டூர் பிரதான வீதி, மண்டூர் - நாவிதன்வெளி பிரதான வீதிகளை ஆகியவற்றை ஊடறுத்து வெள்ளநீர் பாய்வதனால் அப்பகுதியின் போக்குவரத்து இஸ்த்தம்பிதம் அடைந்துள்ளது. மாவடிமுன்மாரி வீதியை ஊடறுத்து வெள்ளநீர் பாய்வதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும், நாற்பதுவட்டை, மாவடிமுன்மாரி, உள்ளிட்ட பல கிராம மக்கள் போக்குவரத்து சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
மண்முனை மேற்கு செயலக பிரிவிற்குட்பட்ட சாமந்தியாறு பாலத்திற்கு முன் உள்ள வீதி உடைந்து வெள்ள நீர் பாய்ந்து செல்வதனால், அப்பகுதியில் அமைந்துள்ள உப்புக்குளம், சில்லிக்கொடியாறு, பன்சேனை போன்ற பகுதிகளுக்கான இவ்வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளன.
இது இவ்வாறிருக்க நாட்டில் வட கிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றதுடன் 2019 நவம்பர் 27 ஆம் திகதியிலிருந்து நாடு முழுவதும் முழுமையாக தாபிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலை புதன்கிழமையிலிருந்து (27) மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி கணபதிப்பிள்ளை சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ, மேல், மத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். என சூரியகுமாரன் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment