பகைமை வளர்த்து அழிவுகளைத் தேடிக் கொள்வதை விட ஒற்றுமையால் ஒன்றிணைவதே மேல் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புத் தலைவர் ரீ. வசந்தராசா.
இந்த நாட்டில் இன மத பகைமைகளை வளர்;த்து மீள முடியாத அழிவுகளைத் தேடிக்கொள்வதை விட ஒற்றுமையால் உயர்வடைவதே மேல் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் ரீ. வசந்தராசா தெரிவித்தார்.
சமூகங்களுக்கிடையில் இன ஐக்கியத்தை வலியுறுத்தும் நோக்கில் இலங்கை செஞ்சிலுவைச் சங்ககத்தின் மட்டக்களப்புக் கிளையினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் கலாசார சகோதர சங்கமம் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் புதன்கிழமை (20) உரையாற்றினார்.
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க மாவட்ட தலைமையக முன்றலில் மூவினங்ளையும் இணைத்ததான கலாசார சகோதர சங்கம நிகழ்வு இடம்பெற்றது.
அங்கு சமூக ஆர்வலர்கள், சமயத் தலைவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
சமகால இயந்திர வாழ்க்கையோட்டத்தில் எல்லோரும் அன்பையும் பரஸ்பர நட்புறவுகளையும் தொலைத்து விட்டு அசுர வேகத்தில் அமைதியிழந்து எங்கோ ஓடிக்கொண்டிருக்கின்றோம்.
அதனால் தனிப்பட்டவர்களுக்குள்ளும், குடும்பங்களுக்குள்ளும் சமூகங்களுக்கிடையிலும் அமைதி இல்லை. அவநம்பிக்கையோடும் அச்சத்தோடும் வாழ்கின்றோம்.
சமாதானத்தை ஒருபோதும் வெளியில் இருந்து இறக்குமதி செய்ய முடியாது. அவரவர் மனங்களில் அந்த சமாதானம் நிலை பெற வேண்டும்.
இனங்களுக்கிடையில் அவர்தம் கலாசார பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களைப் புரிந்து கொண்டு ஒற்றுமையைப் பலப்படுத்துவதன் மூலமே இந்நாட்டில் நிரந்தர சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும்.
ஒரு சமூகத்தை அவர்களது பண்பாடுகளை மத கலாசார விழுமியங்களை, வாழ்வியல் அம்சங்களை மதிப்பதனுடாகவே சமாதான ஐக்கியத்தைக் கட்டி வளர்க்கலாம் என்ற முயற்சியை எல்லோரும் தொடங்க வேண்டும்.
இலங்கையில் எல்லா இன சமூகத்தவர்களும் எவ்வாறேனும் அன்பினால் இணைந்து மட்டும்தான் வாழ வேண்டும் என்ற திடசங்கற்பத்தை அனைவரும் மனிதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
வன்முறைகளால் வஞ்சம் தீர்ப்பதை விட அன்பினால் அரவணைத்து அமைதியை நிலை நாட்டி வாழ்வதே சிறந்ததாகவும் அபிவிருத்திக்கு உகந்த வழியாகவும் இருக்கும்.
இந்த நாட்டில் வாழும் மக்களிடம் சமாதானமும் நல்லிணக்கமும் அழிந்து போனால் அதற்கப்பால் அழிவதற்கு வேறொன்றுமே மிஞ்சாது.
அழிவு நாச வேலைகளை ஒரு சாரார் அன்றிலிருந்து இன்றுவரை செய்து கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் அவ்வாறு செய்வதற்கு நாட்டு மக்கள் பிரிந்து பிளவுபட்டு நிற்பதே காரணமாகும்.
அழிவு நிலைமையை தடுத்து தவிர்த்துக் கொள்வதற்காக இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் அயராது பாடுபட்டு வருகின்றது.
எதிர்கால சந்ததிக்கு இந்த தேசத்தை அமைதி மிக்கதாக ஆக்கி வைக்க வேண்டும். பல்லின சமூகக் கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் சகலவிதமான வளங்களையும் கொண்ட நம் தேசம் இனம் மதம் மொழி என்ற பிரிவினைகளால் அழிந்து போக இனியும் அனுமதிக்கக் கூடாது” என்றார்.
0 Comments:
Post a Comment