13 Nov 2019

கட்டுரை : தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமா? மட்டக்களப்பில் ஜனாதிபதி தேர்தல் கள நிலவரம்.

SHARE
கட்டுரை : தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமா? மட்டக்களப்பில் ஜனாதிபதி தேர்தல் கள நிலவரம். 


(சக்தி)

இலங்கையின் 8 வது நினைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தலை மக்கள் எதிர்வருகின்ற 16 ஆம் திகதி எதிர்கொள்ளவிருக்கின்ற இந்நிலையில் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தத்தமது பிரசாரங்களை முடுக்கி விட்டுள்ளனர். இந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை வரலாற்றில் எப்போமில்லாத வகையில் முன்னாள் ஜனாதிபதிகளோ, தற்போது பதவியிலிருக்கும் ஜனாதிபதியோ, பிரதமரோ, முன்னாள் பிரதமரோ போட்டியிடவில்லை. மாறாக புதியவர்கள்தான் தேர்தல்களத்தில் இறங்கியுள்ளார்கள். இந்த தேர்தலை மக்கள் எவ்வாறு நோக்குகின்றார்கள் என்பதை மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வாயிலாக இங்கு பார்க்கலாம்.

ஓவ்வொருகட்சியினரும் தத்தமது கோரிக்கைகளுடன் மட்டக்கப்புக்கு வந்து அவர்களது கருத்துக்களைத் தெரிவித்துவிட்டுச் செல்கின்றாரகள். நாங்கள் 75 வருடகாலமாக எமது உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்ற சமூகம். காலா காலமாக இரண்டு பெரும்பாண்மைக் கட்சிகளிலும் தந்தை செல்வா பண்டா ஒப்பந்தத்திலிருந்து ஏமாற்றப்பட்டுத்தான் வருகின்றோம். தொடற்சியான அகிம்சை போராட்டங்களால் நசிக்கப்பட்டு வந்துள்ளோம். பின்னர் 30 வருடகால யுத்தம், சர்வதேச நியதிகளுக்கு மாறாக மிகவும் மோசமாக நிறைவு செய்யப்பட்ட யுத்தம். அதனுடைய கதாநாயகர்கள் தற்போது ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்குகின்றார்கள். இதனை நாங்கள் மிகுந்த வேதனையாகப் பார்க்கின்றோம்.

வடக்கு கிழக்கிலுள்ள சிறுபான்மை மக்களுக்கள் கடந்த காலங்களில் மிகவும் கொடூரமாக பாதிக்கப்பட்டார்கள். நாங்கள் சுந்திரமாகவும், சுயாதினமாகவும் செயற்படக்கூடிய சமூகமாக இருக்கின்றோம். ஆனாலும் இன்னும் 75 வருடகாலம் ஏமாறக்கூடிய சமுகமாக வாழ்வதற்கு நாங்கள் தயாரில்லை. எங்களுடைய வாக்குகள் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றார்களோ, அதற்கு ஏற்றாற்போல் எமது இறையாண்மையைப் பாதுகாப்பவர்களாக  நாங்கள் இருக்கின்றோம். இந்த நாட்டில் நாங்கள் சிறுபான்மையினராக இருந்தலும் எமது பூர்வீக நிலப்பகுதியில் நாங்கள் பெரும்பாண்மையாகத்தான் வாழ்ந்து கொண்ருக்கின்றோம். அந்த வகையில் எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தேர்தலின் மூலமாக ஒரு பதிவு ஒன்றை இந்நாட்டில் ஏற்படுத்த வேண்டும் அதற்காக இந்த தேர்தலை புறக்கணிப்பதை விட வேறுவழியில்லை என தெரிவிக்கின்றார் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் எஸ்.சிவயோகநாதன். இவரின் கருத்து இவ்வாறு இருக்கையில்…


நாட்டில் ஒரு உத்தமரை தேர்ந்த எடுப்பதற்கு முடியாத நிலைக்கு நாங்கள் ஆளாக்கப்பட்டிருக்கின்றோம். தற்போது ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை வகிக்கும் இரண்டு வேட்பாளர்களை விடுத்து வேறு ஒருவருக்கு வாக்குகளை அளிப்பதில் எதுவித பிரயாசனமும் இல்லை. அடுத்து எமது வாக்கை பாவிக்காமல் விடுவதும் யானை தலையிலே மண்ணை அள்ளிக் கொட்டிய நிலைக்கும் ஆளாவோம். ஏனெனில் ஏற்கனவே இவற்றில் நாங்கள் அனுபவப்பட்டுள்ளோம். நாங்கள் வாக்கைப் பாவிக்காவிட்டால் சட்டிக்குள்ளிருந்து அடுப்பிற்குள் விழுந்த கதையாக மாறிவிடுவோம். இவற்றைக் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. 

ஒட்டுமொத்தமாக நாங்கள் பார்க்கப்போனால் “முக்கியமான இரண்டு பேய்கள் அதில் கொஞ்சமாவது ஈரமுள்ள பேய் எது என்று பார்க்கவேண்டும்.” இந்த நாட்டிலே இரண்டு மொழி இருக்குமானால் ஒரு நாடு இருக்கும், ஒரு மொழி இருக்குமானால் இரண்டு நாடுகள் இருக்கும் என்று எமது மூத்த இடதுசாரி காலம் சென்ற கொவினால் டி சில்வா ஏற்கனவே சொல்லியிருக்கின்றார். தற்போது மொழி என்பதைத் தவிர்த்து தற்போது மதம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, சென்று கொண்டிருக்கின்றது. இன்னும் எமது நாடு மோசமான நிலைக்குச் செல்லலாம். இவ்வாறான நிலைக்கு எமது நாட்டைத் தள்ளியவர்கள்  அரசியல்வாதிகள் என்பதை மறந்துவிடக்கூடாது. 
எனவே அரசியல் மேடைகளில் இனவாதமோ, மதவாதமோ பேசக்கூடாது என்ற கருத்தை அரசியலமைப்பில் சேர்க்கவேண்டும். வாக்களிப்பது அவரவர் உரிமை எனவே இரண்டு பிரதான பேய்களில் எந்தப்பேய்க்கு கொஞ்சமாவது ஈரம் இருக்கு என்பதை அறிந்து அந்தப்போய்க்கு வாக்கழிக்கலாம். என தெரிவிக்கின்றார் மற்றுமொரு சிவில் சமூக செயற்பாட்டாளரும் ஓய்வு பெற்ற அதிபருமான எஸ்.அருளானந்தம்.

நாங்கள் காட்டாட்சிக்கு செல்லவேண்டுமா அல்லது மீண்டும் நல்லாட்சிக்குச் செல்லவேண்டுமான என பார்க்கவேண்டியுள்ளது. 2005 ஆம் ஆண்டு நாங்கள் விட்ட மகா தவறு எங்களுடைய இனம் முற்றாக அழிவதற்கு ஒரு வழிவகுத்தது. அதுபோல் இந்த தேர்தலிலும் வாக்களிக்காமல் விடடுவாம் என்று சொல்கின்றவர்கள் எமது மக்கள் அழிகின்றபோது என்ன செய்தார்கள். அவர்கள் விட்டதவறினால் எமது வீரபுருஷர்கள் எல்லாம் கொன்றொளிக்கப்பட்டுள்ளார்கள், காணாமலாக்கப்பட்டுள்ளார்கள். எனவே யாரோ சொல்கின்றார்கள் என்பதற்காக வாக்களிப்பைப் பகிஸ்ரிப்போம் எனும் ஒரு மடமைத்தனம் மீண்டும் வரக்கூடாது. 

மீண்டும் ஒருமுறை யாப்பை 18 வது திருத்தத்தைக் கொண்டுவந்து ஒரு ஜனாதிபதி எத்தனைமுறை வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று ஒரு ஏற்பாடு செய்யப்பட்டது. அது இந்த நாட்டிலே பௌத்தர்கள் மாத்திரமே வாழலம், ஏனையவர்கள் கொன்றொளிக்கப்பட வேண்டும் என்ற கோதாவிலே  கொண்டுவரப்பட்டதே தவிர வேறு எதற்குமாக இருக்கவில்லை. தற்போது வாக்களிக்காவிட்டால் இந்த நிலமை மீண்டும் வரலாம். கடந்த ஏப்ரல 21 குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் கடந்த காலத்தில் காட்டாட்சி செய்தவர்கள்தான் என்று தற்போது சொல்லப்பட்டு வருகின்றது. என தெரிவிக்கின்றார் சிவில் சமூக செயற்பாட்டாளர் அ.செல்வேந்திரன். இந்நிலையில்…

கடந்த காலத்தில் அமெரிக்காவில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்தார். ஆனால் எமது நாட்டில் வருபவர்கள் எல்லாம் இனவாதம் பேசுகின்றவர்களாகத்தான் இருக்கின்றார்கள். நாட்டில் ஒரு நல்ல தலைவரைக் கொண்டுவருவதற்குரிய செயற்பாடுகளை எந்த சிவில் அமைப்புக்களும் உருவாக்கவில்லை. இனவாதம் இல்லாத ஒரு தலைவரை உருவாக்கவேண்டும். இவ்வாறான ஒரு தலைவரை இனம்காண்பது ஒரு பிரஜையின் கடமையாகும். 

கடந்த காலத்திலிருந்து நாங்கள் அரசியல் சீர்த்திருத்தம் பற்றிக் கதைத்தோம். அதற்குரிய செயற்குழு அமைத்தார்கள் எந்த சீர்த்திருத்தத்தை மேற்கொள்ள போகின்றோம் என்று சொல்லவில்லை. கடந்த கால ஆட்சியில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடித் தேடி அலையும் உறவினர்களும், போராட்டம் நாத்தும் இடங்களிலேயே உயிரை மாய்த்துக் கொள்கின்றார்கள். அவர்களையும் வைத்து அரசியல் செய்கின்றார்கள். எனவே நமது நாட்டுக்கு நல்ல தலைவரைக் கொண்டுவருவோம் என்பது தொடர்பில் நாங்கள் பிரசாரம் செய்வோம். மக்கள் வாக்களிப்பை புறக்கணிப்போம் என்பதற்கு காரணம் மாறி மாறி வந்த அரசாங்கத்தினால் அடி வாங்கியதுதான். என சிவில் சமூக பெண் செயற்பாட்டாளரான வை.சேதீஸ்வரி தெரிவிக்கின்றார். இச்சந்தர்ப்பத்தில்….

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனவரும் ஒன்றிணைந்து நல்லாட்சியை உருவாக்கினோம். அதன்மூலமாக அனைவரும் எதிர்பார்த்தோம். எங்கள் அனவர் மீதும்; சுதந்திரப் பூக்கள் தூவப்படும் என்று. அந்த எதிர்பார்ப்பு ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றோம். நல்லாட்சி அரசு வருவதற்கு முன்னரும் சிறுபான்மை மக்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டார்கள். இவ்வாறு நல்லாட்சி வந்தபின்னரும் அதிகளவு வன்முறைகள் நடந்திருக்கின்றன. பல்சமய மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டிலே அனைத்து மதங்களும் சொல்வது சாந்தி சமாதானம், சமத்துவம் என்பதைத்தான் செல்கின்றன.  என கலந்தர் லெவ்வை மரியம். கூறுகின்றார்.                                   


இவரின் கருத்து இவ்வாறு இருக்கையில்….

இலங்கையின் கடந்தகால அரசியல் செயற்பாடுகளைம், நடைபெற்ற அசம்பாவிதங்களையும் உற்றுநோக்கினால் நடைபெறவுள்ள ஜனாதித் தேர்தலை புறக்கணிப்பதைத் தவிர வேறுவளியில்லை என தெரிவிக்கின்றார் சிவில் அசமூக செயற்பாட்டாளரான ஏ.சி.அப்துல் ரகுமான். 

நாங்கள் அரசியல்வாதிகளோ, அரசியல் செயற்பாட்டாளர்களோ அல்ல ஆனால் நடைபெறவுள்ள ஜனாதித் தேர்தலில்  வாக்களிப்பை புறக்கணிக்காமல், மக்கள் சிந்தித்து செயற்படவேண்டும். என தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் இ.மனோகரன் தெரிவித்தார்.


நாட்டில் வாழும் சமூகங்களுக்கிடையில் தற்போது தீவிரமான  பிளவு நிலவுகிறது, அதை அப்படியே வளரவிட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூக அரசியல் செயல்முறைகளுக்கும் பெரும் அடியாக இருக்கும். 
இன முரண்பாட்டுச் சூழ்நிலையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதோடு சிவில் சமூக அமைப்புக்களும் இது தொடர்பாக  தலையிட முடியும்.


சமூக மாற்றிகளாக செயல்படக்கூடிய திறன் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பல்லின செயற்பாட்hளர்கள் நடைமுறையில் பரஸ்பர பின்னிப் பிணைந்த இன ஐக்கியத்தை உயிரூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

இனங்களுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் வகிபாகம் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனைப் பொறுப்பு வாய்ந்த ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் தமது பங்கையும் பணியையும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாய் நிறைவேற்ற வேண்டும். என இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரெட்ன தெரிவித்தார்.

இவர்களின் கருத்துக்கள் இவ்வாறு அமைகின்ற இந்நிலையில்…. வாக்குளை புறக்கணிக்கணித்து விட்டு வெறுமனே இருந்தால் எமது உரிமைகளைப் பெறமுடியாது. ஏதிர்காலத்தில் எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக நாம் வாக்களிக்க வேண்டும். எனவே இந்த சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு எந்தளவு உறுதிப்படுத்தப் போகின்றது என்பது கேள்வியாகவுள்ளது. இந்நிலையில் நல்ல சிந்தனையுள்ள வேட்பாளருக்கு வாக்களிப்பது நல்லதாகும் என மக்கள் கருதுகின்றனர். 


SHARE

Author: verified_user

0 Comments: