12 Nov 2019

17ஆம் திகதியோடு நாட்டில் இன மத பேதம் மனித உரிமை மீறல்கள் ஒழிந்து சமாதானத்திற்கான புது யுகம் ஆரம்பமாகிறது - பஷில் ராஜபக்‪ஷ‬.

SHARE
17ஆம் திகதியோடு நாட்டில் இன மத பேதம் மனித உரிமை மீறல்கள் ஒழிந்து சமாதானத்திற்கான புது யுகம் ஆரம்பமாகிறது - பஷில் ராஜபக்‪ஷ‬.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு எதிர்வரும் 17ஆம் திகதி இந்த நாட்டில் இன மத பேதம், மனித உரிமை மீறல்கள் ஒழிந்து எல்லோரும் நிம்மதியாக வாழ்வதற்கான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புது யுகம் ஆரம்பமாகவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், அதன் ஸ்தாபகரும், முன்னாள் பொருளாதார அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர்களில் ஒருவருமான பஷில் ராஜபக்‪ஷ தெரிவித்தார்.‬

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்‪ஷவை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10.11.2019 மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் கூட்டங்கள் இடம்பெறற்றன.‬

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் என்.எம். முஹம்மத் சுஐப் தலைமையில் ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பஷில் ராஜபக்‪ஷ மேலும் உரையாற்றுகையில்,‬

எதிர்வருகின்ற 17ஆம் திகதி கோத்தபாய ராஜபக்‪ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுகின்றபோது இந்த நாட்டிலுள்ள எந்த சமூகத்தைச் சேர்ந்தவராயினும் அவர் சம உரிமையுடன் அந்தஸ்துடன் நடத்தப்படுவார் என்கின்ற உத்தரவாதத்தை நான் இங்கு பதிவு செய்து பிரகடனப்படுத்துகின்றேன்.‬

தொழிலுக்காக, படிப்புக்காக, பணிக்காக, மார்க்கக் கடமைகளுக்காக செல்லுகின்றபோது இன மத மொழி வேறுபாகளினால் அவர் துன்புறுத்தப்படமாட்டார் என்பதையும் உறுகூறுகின்றேன்.

மனித உரிமை மீறல்களுக்கும் அநியாயங்களுக்கும் இந்த நாட்டில் இனி இடமில்லை.
கிழக்கு மாகாண மக்கள் சற்று பின்னோக்கி நினைவூட்டிப் பாருங்கள் 2015 ஜனவரி 8க்கு முன்பாக உங்களுக்குச் செய்து தரப்பட்ட கார்பெற் வீதிகளை, பாலங்களை, பாடசாலைகளை, நீர்ப்பாசனத்தை, குளங்களை, தொழிற்சாலைகளை, வைத்தியசாலைகளை மஹிந்தவின் அரசாட்யிலேதான் இவற்றை நீங்கள் அனுபவிக்கக் கிடைத்தது.

முஸ்லிம் தலைவர்கள் இதனை மறந்திருந்தாலும் பொதுமக்களாகிய நீங்கள் ஒரு போதும் மறந்திருக்க மாட்டீர்கள், ஒரு தடைவை இரண்டு தடவை நீங்கள் தீர்மானத்தில் சறுக்கலடைந்திருக்கலாம் ஆனால் அதே தவறை மூன்றாம் முறையும் செய்ய மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

இலங்கையை இன மத மொழி பேதமற்ற தேசமாக புது யுகம் படைக்க நீங்கள் திடசங்கற்பம் கொள்ளுங்கள், நல்லதே நடக்கும் என்றும் நம்புங்கள், 17ஆம் திகதி நாங்கள் எல்லே7hரும் இணைந்து பயணிப்போம், சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவோம், அச்சமின்றி ஆக்கிரமிப்பின்றி அமைதியான வாழ்க்கை வாழுவோம் அதற்காக அணி திரளுமாறு அன்பாக அறைகூவல் விடுக்கின்றேன்.

முஸ்லிம் சமூகம் என்ற ரீதியில் உலக முஸ்லிம் நாடுகளில் அமெரிக்கா புகுந்து செய்த, செய்து கொண்டு வரும் அட்டூழியங்களை நினைத்துப் பாருங்கள். அதுபோலதான் இலங்கையிலும் புகுந்து கொள்வதற்கு அவர்கள் ஒப்பந்தம் செய்கிறார்கள். அதுவும் தேர்தல் காலத்தில் ஒப்பந்தம் செய்கிறார்கள்.

திருகோணமிலையிலிருந்து அவர்களது ஆக்கிரமிப்புத் தொடரப்போகிறது. முஸ்லிம் தலைவர்கள் இப்படியான விடயத்தை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: