நான் 1985 ஆம் அண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டு செயற்பட்டு வந்தேன். பின்னர் அப்போது இந்தியன் இராணுவத்தினரால் பெரிதும் பாதிக்கப்பட்டு கொழும்புக்குச் சென்றேன். கொழும்பில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் பெயரில் 1989.03.23 அன்று கைது செய்யப்பட்டேன். பின்னர் மகசீன் சிறைச்சாலையில் என்னைத் தடுத்து வைத்தார்கள். பின்னர் 1997 ஆம் அண்டு சிலையிலிருந்து விடுதலை பெற்று வெளியில் வந்தேன். இவ்வாறு சிறையில வாடி வெளியில் வந்து வன்னிக்குச் சென்றேன் வாழ்ந்துவந்தேன்.
எனது சொந்த இடம் மானிப்பாய், மானிப்பாய் இந்துக்கல்லூரியில்தான் எனது ஆரம்பக் கல்வியையும் கற்றேன். பின்னர்தான் நான் வன்னியில் திருமணம் செய்து வாழ்வைத் தொடர்ந்து வந்தேன். இறுதியாக நடைபெற்ற யுத்தத்தில் செல்வீச்சுக்கிலக்காகி எனது மனைவியையும் பறிகொடுத்தேன்.
என தெரிவிக்கின்றார் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளியான பெருமாள்சாமி சந்திரகுமார் என்பவர். அவருடைய தற்போதைய நிலமை தொடர்பில் திங்கட்கிழமை (21) களுவாஞ்சிகுடியில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..
நான் எங்கு செல்வதென்று தெரியாது தவித்தபோது மட்டக்களப்பிற்கு வந்து துறைநீலாவணை எனும் கிராமத்தில் இரண்டாவது திருமணம் செய்து நானும் எனது இரண்டாவது மனைவியும் வாழ்ந்து வருகின்றேன். எனது மனைவிக்கும் தாய் தந்தை யாருமில்லை, நான் ஊனமற்றவன் என தெரிந்துதான் எனது மனைவி என்னை திருமணம் செய்தார். யுத்தத்தினால் எனது வலது கால் செயலிழந்துள்ளது.
இந்நிலையில் எனக்கு 2019.07.01 அன்று மாரடைப்பு வந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டு எனக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அதிலிருந்து ஒருமாதம் கழிந்த பின்னர் இரண்டாவதுமுறையும் மாரடைப்பு வந்தது. இந்நிலையில்தான் மிகவும் வேதனையில் வாழ்ந்து வருகின்றேன் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நான் மாதாந்தம் கிளினிக் போகின்றேன். இன்னுமொரு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள். எனக்கு இதுவரையில் எந்தவித தொழில்வாய்ப்புக்களுமில்லை. தற்போதைக்கு எதுவித வேலையும் செய்யவேண்டாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் எதுவித வருமானமும் அற்ற நிலையில் நான் வாழ்ந்து வருகின்றேன்.
நாம் இருக்கும் வீடு வளவு அனைத்தையும் அடவு வைத்துதான் எனது சத்திர சிகிச்கைக்கு பணம் பெற்றோம். எனக்கு அயலவர்களோ, அல்லது சொந்தபந்தங்களின் உதவிகளோ கிடையாது. மிகவும் வறுமையில் வாடும் எனது நிலமை தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள தமிழ் அரசியல்வாதிகளிடம் சென்று எனது நிலமையினை எடுத்தியம்பினேன். அவர்கள் அனைவரும் சொன்னது போங்கள் உங்களுக்கு நாங்கள் உதவி செய்வோம் என்று ஆனால் இதுவரைகாலமும் எவரும் எனக்கு உதவி செய்யவில்லை.
நான் பலரிடமும் சென்று பிச்சை எடுத்துத்தான் வாழ்கின்றேன். எனது வாழ்வில் பல சாதனைகளைச் செய்துள்ளேன் அந்த சாதனைகள் அனைத்திற்கும் தற்போது எனக்குக் கிடைத்திருப்பது நான் பிறரிடம் சென்று பிச்சை எடுக்கும் நிலைதான். இந்நிலையில்தான் எனது கடந்தகால நண்பர் ஒருவர் நான் பிச்சை எடுக்கும்போது என்னைக் கண்டு நீ பிச்சை எடுக்கவேண்டாம் எனக்கூறி என்னை இவ்வாறு ஊடகங்கள் வாயிலாக உமது பிரச்சனைகளைத் தெரிவித்தால் அதனைப் பார்த்து உமக்கு பலர் உதவி செய்ய முன்வருவாக்கள் என தெரிவித்ததன் விளைவாகத்தான் நான் இன்று ஊடகங்கள் வாயிலான எனது பிரச்சனைகளை வெளிக்கொணர்கின்றேன்.
தற்போது ஒருவேளை உணவுக்குக்கூட நான் என்னசெய்வதென்று தெரியாத நிலையில் நான் வாழ்ந்துவரும் எனக்கு மருத்துவ செலவுக்கு நான் என்ன செய்வேன். மாதாந்தம் கிளினிக் போய் வருவதற்குக்கூட பணம் இல்லாமலுள்ளது. எனவே எனது தமிழ் சொந்தங்க்ள எனது நிலமையை நேரில் வந்து பார்வையிட்டு எனக்கு தங்களாலான ஏதாவது உதவியினைத் தந்துதாவுமாறு மிகத் தாழ்மையுடுன்வேண்டுகின்றேன்.
மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு கிளினிக் சென்றாலும் அனைத்து மாத்திரைகளும் கிடைப்பதில்லை அவர்கள் அசைவாசி மாத்திரைகளை வெளியில் கடையில்தான் வாங்குமாறு சொல்கின்றார்கள் மாத்திரைகளின் விலையோ அதிகம் அதற்குக்கூட என்னிடம் பணம் இல்லாமல் உள்ளது.
எனது சுகயீனத்தையும் பொருட்படுத்தாமல் நாளன ஓடி, ஆடி உழைக்காவிட்டாலும் இருந்த இடத்திலிருந்தே கருவாடு வியாபாரம் செய்யலாம் என நினை;ககின்றேன். எனவே எனக்கு சிறியபெட்டிக்கடை ஒன்றை அமைத்து முதற்தடவையாக கருவாடு வாங்குவதற்கும் சிறிய உதவி செய்வார்களேயானால் அதனை எனது வாழ்நாளில் மறக்கமாட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment