அதிகரித்து வரும் தற்கொலை முயற்சிகளை அனைத்துத் தரப்பினரும் இணைந்து தடுத்து நிறுத்த வேண்டும்
உளநல ஆற்றுப்படுத்தல் உதவியாளர் வினோஜினி.
சமுதாயத்தில் அதிகரித்து வரும் தற்கொலை முயற்சிகளை அனைத்துத் தரப்பினரும் இணைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலக உளநல ஆற்றுப்படுத்தல் உதவியாளர் ரி. வினோஜினி தெரிவித்தார்.
மட்டக்களப்பு பெண்கள் அபிவிருத்தி ஒன்றிய (றுழஅநn னுநஎநடழிஅநவெ குழசரஅ) இணைப்பாளர் சோமா சிவிசுப்பிரமணியம் தலைமையில் செவ்வாய்க்கிழமை 08.10.2019 இடம்பெற்ற மகளிருக்கான விழிப்பூட்டல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வினோஜினி இந்தக் கருத்தை வெளியிட்டார்.
ஆரையம்பதி பிரதேச செயலக ஆரையம்பதி விதாதா வள நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வூட்டலில் கலந்து கொணள்டு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
தற்போதைய இயந்திர மய வாழ்க்கையோட்டத்தில் நெருக்கடிகள் அதிகரித்துள்ளதால் பகிர்ந்து கொள்ளலுக்கான சந்தர்ப்பமின்றி அநேகர் விரக்தியின் விழிம்புக்குச் சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் இவ்வாண்டின் கடந்த செப்டெம்பெர் வரையான 6 மாத காலப்பகுதியில் சுமார் 20 தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான சந்தர்ப்பங்களுக்கு கூடுதலாக பெண்களும் அவற்றில் இளவயதினரே அதிகமாகவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவை எமக்கு அதிகார பூர்வமாக வைத்தியசாலைகளிலிருந்தும் தனிப்பட்ட பரிந்துரைப்பு தொடர்பாடல்களிலிருந்தும் கிடைத்த நிகழ்வுகள். இவற்றைத் தவிர தங்களது மனதுக்குள்ளே வைத்து விரக்தி நிலையில் உழலுவோர் இன்னும் பலர் இருக்கக் கூடும்.
எனவே, இந்நிலைமை சமுதாயத்தின் ஆரோக்கியமான நிலையை ஒருபோதும் எடுத்துக் காட்டாது.
ஆகவே, ஒட்டுமொத்தமாக தற்கொலையோ தற்கொலை முயற்சியோ பிரச்சினைகளுக்கான தீர்வல்ல என்பதை அறிவார்ந்த ரீதியில் விழிப்படையச் செய்ய வேண்டும்.
தன்னுயிரை மாய்த்துக் கொள்ளல் என்பது இலகுவான தீர்வென்று பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள்.
எனவே, பொறுப்புதாரிகள் என்ற வகையில் தற்கொலை முயற்சிகளை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பாரும் ஒருங்கிணைந்து தடுத்து நிறுத்த வழிகாண வேண்டும்.” என்றார்.
0 Comments:
Post a Comment