எமது தமிழ் மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையிலே தான் தேர்தலுக்கான ஆதரவும் அமையும் - தமிழ் அரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்.
எமது தாயக பிரதேசமான வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் குறிப்பாக தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏதோவொரு விதத்தில் விரும்பியோ விரும்பாமலே ஈடுபட்டே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடே இருக்கின்றது. அந்தவகையில் எமது வரலாற்றைக் கருத்திற்கொண்டு எமது தமிழ் மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையிலே தான் எமது ஆதரவும் இருக்கும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும், சமகால அரசியல் நிலைமை தொடர்பிலும் (04.10.2019) வெள்ளிக்கிழமை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பல வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தி விட்டார்கள். முக்கியமான கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் கட்டுப்பணம் செலுத்தாமையினால் யார் வேட்பாளர்களாக வருவார்கள் என்ற தெளிவற்ற நிலையே தற்போதும் இருக்கின்றது.
எமது கட்சியைப் பொறுத்தவரையில் நாங்கள் எல்லாத் தேர்தல்களிலும் வலியுறுத்துகின்ற எமது இனப்பிரச்சனை தொடர்பான தீர்வு என்கின்ற விடயமே பிரதானமானது. இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இது எமது கோரிக்கையாக இருக்கும்.
அதேவேளை முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகள் எவ்வாறு .இருக்கின்றது என்பது தொடர்பில் கூடுதல் அக்கறை கொள்வோம்.
இது இவ்வாறு இருக்க தற்போது வடக்கு கிழக்கில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அறிகின்றோம். எமது தலைவரையும் இது தொடர்பில் அணுகியிருப்பதாகவும் அறிகின்றோம். ஆனால் எங்களிடம் அவ்வாறான அபிப்பிராயம் இல்லை. என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment