2 Oct 2019

அடி நிலையிலுள்ள கிராம மக்களிடையே சேவைகள் இன்றுவரை சென்றடையவில்லை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன்

SHARE
அடி நிலையிலுள்ள கிராம மக்களிடையே சேவைகள்  இன்றுவரை சென்றடையவில்லை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அமைப்புக்களும் அரச சார்பற்ற அமைப்புக்களும் பலமாக இருந்த போதிலும் அடி நிலையிலுள்ள கிராம மக்களிடையே அவற்றின் சேவைகள் இன்றுவரை சென்றடையவில்லை என்பதையே காணமுடிகின்றது. இதுவொரு கவலைக்குரிய விடயமாகும், என மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தெரிவித்தார்.

அரச அலுவலகங்களில் கடமை புரிகின்ற உள நல ஆற்றுகையாளர்களுக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிவில் சமூக மட்ட அமைப்புக்களில் பணிபுரிகின்ற செயற்பாட்டாளர்களுக்குமாக இடம்பெறும் ஒரு வார கால வதிவிடப் பயிற்சி நெறியில் புதன்கிழமை 02.10.2019 கலந்து கொண்டு அவர் கருத்துத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து சமகால சமூக நிலைபற்றி தெளிவுபடுத்திய அவர்,

கடந்த 30 வருட கால வன்முறை தொடர்ச்சியான இடப்பெயர்வுகளால் அடி நிலையிலுள்ள கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

அந்த நிலையில் பெண்களின் கல்வியறிவு தேசிய ரீதியில் ஒப்பிடும்பொழுது யுத்தத்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிகவும் பின்னடைந்திருந்தது.

அதேவேளை மட்டக்களப்பு மாவட்டம் வறுமை மாவட்டங்களின் தெரிவில் முதலிடமாகவும் இருந்தது.

இத்தகைய அரசியல் சமூக பொருளாதார பின்னணிகளில் பெண்களும் சிறார்களும் பல வகையான துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி இருந்தனர்.

இவற்றுக்கெல்லாம் சட்ட ரீதியான சமூக ரீதியான தீர்வுகளை எட்டுவதற்காக இந்தப் பிரச்சினைகள் சரியான முறையிலே அடையாளம் காணப்படவில்லை என்று நான் கூறுகின்றேன்.

அந்த வகையில் இவைகள் தொடர்ந்து யுத்தம் நிறைவுற்ற பின்னரும் அடிமட்ட நிலையிலுக்கின்ற மக்களுடைய இல்லத்து வன்முறைகள் கணவனால் கைவிடப்படுகின்ற நிலை,  பெண்கள் சிறுமிகள் மீதான துஷ‪;பிரயோகங்கள், ஆண்கள் மறு திருமணம் செய்தல், சட்டவிரோதமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களால் ஏமாற்றப்படுதல், சித்திரவதைக்குட்படுதல், என்பனவற்றினால் பெண்களும் சிறுமிகளும் பலவகையான வன்முறைகளுக்குசும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி வருகின்ற நிலை அதிகரித்தே வருகின்றது.‬

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்படும் நிலையிலுள்ளவர்களுக்கும் தீர்வு, பரிகாரங்களை வழங்கக் கூடிய கட்டமைப்புக்கள் இருந்தபோதும் ஒரு குறிப்பிடத்தக்க அளவு கணிசமான இடைவெளியையே நாம் உணர்ந்தோம்.

அதனடிப்படையிலேயே இந்த மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 9 பிரதேச செயலாளர் பிரிவுகளைத் தேர்ந்;தெடுத்து மிகவும் அடி நிலையில் பாதிக்கப்பட்ட கிராமங்களாக இனம் கண்டு கொண்ட வாகரை, வாழைச்சேனை, கிரான், ஏறாவூர்ப்பற்று, வவுணதீவு, ஆரையம்பதி, பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார் 994 கிராமங்களை உள்ளடக்கிய பெண்களை சிறு குழுக்களாக பிரதேச மட்டக் குழுக்களாக மாவட்ட மட்டக் குழுக்களாக ஒருங்கிணைத்து அவரக்ளுக்கான ஆளுமை விருத்திச் செயற்பாட்டையும் அரச பொறிமுறைக் கட்டமைப்புக்களுக்குள் உள்ள அமைப்புக்களோடும் இணைந்து நாம் சேவையாற்றி வருகின்றோம்.

உள ஆற்றுப்படுத்தல் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்கள், சிறார்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அனைவரினதும் பிரச்சினைகளை இலகுவாக சுமுகமாகத் தீர்க்க முடியும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய ஒதுக்குப்புறக் கிராமங்களுக்குச் சென்றால் தங்களது பிரச்சினைகளைக் கூட வெளியில் வாய்விட்டுச் சொல்ல முடியாதளவுக்கு அங்குள்ள கிராமத்தவர்கள் அழுது புலம்புகின்றார்கள் இந்த நிலைமையை நாம் கிராமங்களில் இன்றும் காணக்கூடியதாகவிருக்கின்றது. இது உளரீதியான பாதிப்பைக் காட்டுகின்றது.
பெண்களின் உள ஆற்றலை மேம்படுத்தினாலேயொழிய குடும்பக் கட்டமைப்பை சீரமைக்க வேறு வழியில்லை.

பாதிக்கப்பட்டவர்களை சரியான முறையில் இனங்கண்டு அவர்களுக்கு அனைவரும் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும்.” என்றார். 

SHARE

Author: verified_user

0 Comments: