18 Sept 2019

போதைப் பொருளின் பிடியிலிருந்தும் பாடசாலை இடை விலகலிலிருந்தும் இளஞ்சிறார்களைக் காப்பாற்றுங்கள் - சமூகத்திடம் ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி உருக்கமான வேண்டுகோள்.

SHARE
போதைப் பொருளின் பிடியிலிருந்தும் பாடசாலை இடை விலகலிலிருந்தும் இளஞ்சிறார்களைக் காப்பாற்றுங்கள் - சமூகத்திடம் ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி உருக்கமான வேண்டுகோள்.
இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதிலிருந்தும்  மாணவர்கள் தமது கல்வியை இடை நிடுவில் கைவிட்டுவிடும்  பாடசாலை இடை விலகலிலிருந்தும் இளஞ்சிறார்களைக் காப்பாற்றுங்கள் என ஏறாவூர் பிரதேச சமூகத்திடம் தான் உருக்கமான வேண்டுகோளை முன்வைப்பதாக ஏறாவூர் தலைமைப் பொலிஸ் பரிசோதகரும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுமான நலின் ஜயசுந்தர தெரிவித்தார்.

ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய நலின் ஜயசுந்தரவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் பிரியாவிடையும் சேவை நலன் பாராட்டும் ஏறாவூர் சம்மேளன அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 17.09.2019 இடம்பெற்றது.

சம்மேளனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எல். அப்துல் வாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் உட்பட சமூகப் பிரமுகர்கள், வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பொலிஸ் பொறுப்பதிகாரி நலின் ஜயசுந்தர, எந்தவொரு சமூகத்திலும் எதிர்கால சந்ததியினரான இளைஞர்கள் முக்கியம். எனவே, அவர்களைப் பக்குவமாகப் பரிபாலித்து பாதுகாத்து நாட்டுக்கு வளமுள்ளவர்களாக மாற்ற வேண்டியது சமுதாயத்திலுள்ள ஒவ்வொருத்தர் மீதும் கடமையாகும்.

குறிப்பாக சமகாலச் சூழ்நிலையில் இளைஞர்களைச் சூழ்ந்து அவர்களை அடிமைப்படுத்தக் காத்திருக்கும் போதைப் பொருள் அச்சுறுத்தலின் பேராபத்துப்பற்றி சமூகத்திலுள்ளவர்கள் அதிக அக்கறை எடுக்க வேண்டும்.

முதலில் அவர்கள் சிறந்த உயர்தரக் கல்வியைப் பெற்றுக் கொள்ளும் வரை பாடசாலை இடைவிலகலைத் தடுப்பதற்கு முடிந்த முயற்சிகளை எடுக்க வேண்டும்.

இளைய சமுதாயத்தினர் இளம் பருவத்திலேயே பாடசாலைக் கல்வியைக் கைவிடுவார்களாயின் அவர்களின் வாழ்க்கை தடம்புரள்வதற்கான முதலாவது பின்னடைவாக அது இருக்கும். பாடசாலைக் கல்வி இடைநிறுத்தப்பட்டால் அதற்குப் பிறகு செய்வதற்கு ஒன்றுமே இல்லை.

அதன் பிறகே சட்டவிரோதச் செயல்களைச் செய்வதற்கும் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்துவிடுகிறது. இந்நிலைமை ஆபத்தானது.

அவ்வாறு நிகழுமாக இருந்தால் அதுவே வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடாக அமைந்து விடும்.
எனவே, பாடசாலை இடைவிலகலை எக்காரணம் கொண்டும் சமூகம் அங்கீகரிக்கக் கூடாது. இளையோர்களின் கவனம் தீய வழிகளில் திசை திருப்பப்படாமலிருக்க சிறார்களுக்கும் இளைஞர்களுக்கும் விளையாட்டு முக்கியம்.

எனவே, தீய வழிகளில் அவர்கள் பொழுது போக்கை மேற்கொள்ளாத தமது ஆற்றல்களை வெளிப்படுத்த விளையாட்டு உதவும்.

எவ்வாறேனும் நான் இங்கு கேட்டுக் கொள்வதெல்லாம் இளைஞர்கள் சட்டவிரோத செயல்களில் அல்லது கேடு விளைவிப்பதில் கவனஞ்செலுத்துவதற்கு சந்தர்ப்பம் அளிக்காத நிலைமையை சமூகம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதேயாகும். ஏப்ரில் 21 தாக்குதலின் பின்னர் ஏறாவூர் பிரதேசத்தில்  எந்தவொரு பாரிய அசம்பாவிதங்களுமின்றி இயல்புநிலை இருந்ததையும் ஏறாவூரிலுள்ள எல்லா அரசியல்வாதிகளும், முன்னாள் அமைச்சர், முன்னாள் மாகாண அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் தற்போதைய இராஜாங்க அமைச்சர் உட்பட எந்தவொரு அரசியல்வாதியினதும் தலையீடும் இல்லாமல் எனது கடமைகளை செய்ய முடிந்ததையிட்டும் இப்பிரதேச மக்கள் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் சமாதான இன ஐக்கிய செயற்பாட்டிற்காக முழுமையாக தங்களை அர்ப்பணித்துள்ளது குறித்தும் நான் பெருமைப்படுகின்றேன” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: