மட்டக்களப்பில் கலாச்சார அமைச்சினால் கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கல்.
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சின் வழிகாட்டலில் உதவி தேவைப்படும் கலைஞர்களுக்கு உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் கலைஞர்களுக்கு உதவித் தொகையினை வழங்கும் நடவடிக்கையினை கலாச்சார அலுவல்கள் திணைக்களம்; தற்போது மேற்கொண்டு வருகின்றது.
அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனைக்கமைய இந்த உதவித்தொகை வழங்கும் திட்டம் மாவட்ட ரீதியாக திருப்திகரமாக தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறிய கலைஞர்கள் 53 பேருக்கு தலா 10000 ரூபா வீதம் உதவித் தொகைகளை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (25) மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஏ.சீ.ஜெய்னுலாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
இதன் போது நாட்டுக்கூத்து, கரகாட்டம், கவிதை, மத்தள வாத்தியம், எழுத்துத்துறை, உட்பட பல துறைகளில் இம்மாவட்டத்தில் கலைத்துறைக்கு பணியாற்றிய முதுபெரும் கலைஞர்கள் குறித்த நிதித் தொகையினை பெற்றுக் கொண்டனர். கலைஞர்கள் இந்த உதவித் தொகைகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மாவட்ட கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.வை.தனுசியா, பதவி நிலை உதவியாளர் மொகமட் றிழா, மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் கடமையாற்றும் கலாச்சார உத்தியோகத்தர்கள் கலைஞர்கள் மற்றும் கலைத்துறை குடும்பம் சார்ந்த உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இங்கு அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில் இன்னும் இம் மாவட்டத்தில் கலைஞர்களை வாழ வைத்துக் கொண்டு இளம் தலைமுறையினருக்கு கலைத்துறையை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் இத்தகைய கலைஞர்களின் செயற்பாடுகளை மனதார பாராட்டுகின்றோம். எதிர் காலத்தில் இம் மாவட்டத்தில் உள்ள மூத்த கலைஞர்கள் மற்றும் இளைய கலைஞர்களின் செயற்பாடுகளை ஊக்குவிக்கவும் கௌரவிக்கவும் ஏற்பாடுகளை செய்யப்படும் இதனை நோக்காக கொண்டு மாவட்ட கலைஞர்கள் பேரவை அமைக்கப்பட்டுள்ளது. எனக் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment