2 Sept 2019

பொருளாதார ரீதியாக தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ளாவிடின் அந்த சமூகத்திற்கான அங்கீகாரம் இலகுவில் கிடைக்காது - அருண்காந்த்

SHARE

மலையக மக்கள் ஒவ்வொரு விடயத்திலும் தொடர்ந்தும் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.எந்த ஒரு சமுதாயமும் இதுபோன்று ஏமாற்றப்பட்டதில்லை. எந்தவொரு சமுதாயமும் அரசியல்,சமூக, பொருளாதார ரீதியாக தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ளாவிடின் அந்த சமூகத்திற்கான அங்கீகாரம் இலகுவில் கிடைக்காது".இவ்வாறு இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் பாத்த ஹேவாஹெட்ட பிரதேச மகளிர் அமைப்பாளர்களுக்கான மகளிர் மாநாடு தெல்தோட்டை விலேஜ் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய கட்சியின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் அவர்கள் தெரிவித்தார்.
பாத்த ஹேவாஹெட்ட மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திருமதி.ராமேஷ்வரி அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் நீண்ட கலந்துரையாடலுக்குப்பின் உரையாற்றிய அருண் காந்த் அவர்கள் கூறும்போது தெரிவித்ததாவது...

இன்றைய நவீன உலகில் ஒரு சமுதாயம் பொருளாதார ரீதியாக தன்மை வலுவாக நிலைநிறுத்திக் கொள்ளாவிடின் மற்றைய உரிமைசார் விடயங்களுக்காக போராடுவதும் கடினமாlகிவிடும். இதனை நன்கு அறிந்தே வடக்கு, கிழக்கு,மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டங்களை கொண்டுவர நாம் அரும்பாடு பட்டோம். இதற்காக தமிழகத் தலைவர்களான டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், இல். கணேசன், தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ் ஆகியோரை நாடு முழுவதும் அழைத்துச்சென்று தமிழ் மக்களின் அவல நிலையை காண்பித்தோம்.இத்தலைவர்களை சுமார் 200 வருடங்கள் பழைமையான தோட்டக்குடியிருப்புக்களுக்கு அழைத்துச் சென்றோம்.அவர்கள் எமது மக்களின் குடியிருப்புக்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.அதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்குக்கு அவர்களை அழைத்துச்சென்றோம்.

வடக்கிலும் கிழக்கிலும் ஆரவாரமின்றி பாதிக்கப்பட்ட இடங்களை இல.கணேசன் அவர்களும் தமிழிசை சௌந்திரராஜனும் பார்வையிட்டனர்.இதன் தொடர்ச்சியாக சென்னையிலும் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் சந்திப்பு இடம்பெற்றது.இஙகு தயாரிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கைகள்தான் இந்திய பாராளுமன்றத்தில் இயங்கும் சௌத் புளொக் ஊடாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட்டது.எமது தமிழக தலைவர்கள் தயாரித்த அறிக்கையை மோடி அவர்கள் ஏற்றுக்கொண்டு இலங்கைக்கான வீட்டுத்திட்டத்திற்கான நிதியினை அறிவித்தார்.

அப்போது நாம் ஒரு அரசியல் கட்சியாக செயற்படாமல் பாரிய ஒரு அமைப்பாக செயற்பட்டோம்.இன்று பல்வேறு அரசியல் கட்சிகள் மோடியின் வீட்டுத் திட்டத்தை வைத்து அரசியல் நடாத்துகின்றனர். அவர்களுக்கு  வீட்டுத்திட்டம் எப்படி வந்தது என்றே தெரியாது.இவைகளுக்கப்பால் வீடுகளை தரமற்ற விதத்தில் நிர்மாணித்துக்கொடுத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றார்கள்.நாம் கஷ்டப்பட்டு கொண்டுவந்த ஒரு திட்டத்தை முழுமையாக தரமானதாக கொடுக்கமுடியாமல் போய்விட்டதே என்ற ஏக்கம் எமக்குண்டு. காரணம் நாம் அப்போது அரசியலில் இருக்கவில்லை.எனவே எமது கட்சியானது எமது இலங்கை வாழ் மக்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அவைகள் அத்தனையையும் நிறைவேற்றும்.எமது தலையாய இலக்காக இருப்பது..இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு விடயம்.எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளருக்கே எமது மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொடுப்போம்.எமது மக்களின் கல்வி, பொருளாதாரம்,சமூக,அரசியல்  ஆகிய தளங்களில் நாம் குறுகிய காலத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவோம்.ஆகவே வடக்கு, கிழக்கு ,மலையகம் தெற்கு ஆகிய மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் எம்மை கட்டாயமாக ஆதரிக்கவேண்டும்.

"என்றார்.அதனைத் தொடர்ந்து சீ.என்.டி.பி.கட்சியின் செயலாளர் நாயகம் சிவன் ரவிசங்கர் பொருளாளர் இல.இராமச்சந்திரன் ,இளைஞர் அணி தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்தராஜ் ஆகியோர் உரையாற்றினர்.






SHARE

Author: verified_user

0 Comments: