பதிலீடின்றி ஆசிரியர்கள் இடமாற்றம் 115 மாணவர்களின் கல்வி 3 மாதங்களாகப் பாதிப்பு அதிகாரிகளின் அசமந்தப் போக்கைக் கண்டித்து கவன ஈர்ப்புப் போராட்டம்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்டக்கல்விப் பிரிவிற்குள் அடங்கும் காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் மாணவர்கள் புதன்கிழமை 18.09.2019 கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி பாடசாலை நிருவாகம் மேலும் தெரிவிக்கையில் ஏற்கெனவே ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் இந்தப் பாடசாலையில் சுமார் 460 மாணவர்கள் கற்கும் நிலையில் பாடசாலையிலிருந்து ஏற்கெனவே 3 மாதங்களுக்கு முன்னர் ஒரு ஆசிரியர் பதிலீடின்றி இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதன் பின்னர் கடந்த வாரம் மேலும் ஒரு ஆசிரியர் பதிலீடின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் இந்தக் கல்வியாண்டின் இறுதித் தவணை நெருங்கும் இத்தறுவாயில் சுமார் 115 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதைக் கண்டித்தே இந்த கவன ஈர்ப்புப் போராட்டம் பெற்றோரால் நடாத்தப்படுகின்றது.
இந்தப் பாடசாலையில் மொத்தம் 13 ஆசிரியர்கள் கடமையிலுள்ள நிலையில் மேலும் 3 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருந்து வந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதலாம் ஆண்டுக்கான ஆசிரியரை வழங்குவதாக கல்வி நிருவாகம் வாக்குறுதி அளித்தபோதிலும் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாதிருப்பது ஒரு புறமிருக்க இருக்கும் ஆசிரியர்களும் பதிலீடின்றி இடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.” என்றனர்.
கவன ஈர்ப்பில் ஈடுபட்ட பெற்றோர் “நிரந்தர ஆசிரியர் நியமனம் வேண்டும், வாக்குறுதியை ஏமாற்றாதே” போன்ற வாசகங்களைப் பொறித்த பதாதைகளை ஏந்திருந்தனர்.
0 Comments:
Post a Comment