19 Aug 2019

தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கின்ற காணிகளையும் , இரண்டு மாகாணசபைகளையும் தக்கவைத்துக் கொள்வதே பெரும்பாடாய் இருக்கும் சூழ்நிலையில் யதார்த்த அரசியல் சூழ்நிலைகளை தெளிவாகப் புரிந்துகொண்டு தமிழ் தலைவர்கள் தமக்கான அரசியலை மேற்கொள்ளவேண்டும்

SHARE
தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கின்ற காணிகளையும் , இரண்டு மாகாணசபைகளையும் தக்கவைத்துக் கொள்வதே பெரும்பாடாய் இருக்கும் சூழ்நிலையில் யதார்த்த அரசியல் சூழ்நிலைகளை தெளிவாகப் புரிந்துகொண்டு தமிழ் தலைவர்கள் தமக்கான அரசியலை மேற்கொள்ளவேண்டும்."இவ்வாறு இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின்- CNDP-  மக்கள் சந்திப்புக்கள் அண்மையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மற்றும் வாழைச்சேனை கருவாக்கேணி ஆகிய இடங்களில் சீ.என்.டி.பீ. யின் அமைப்பாளர்கள் டிலோஜன் மற்றும் அன்றூஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற போதே அக்கட்சியின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்கள் நடைபெற்றது.


அதன்பின் தொடர்ந்தும் உரையாற்றிய அருண் காந்த் அவர்கள் கூறும்போது மேலும்  தெரிவித்ததாவது...

ஒரு பக்கம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் மீளவும் பெறப்படும் போது மறுபக்கம் கிழக்கு மாகாணத்திலும் வன்னியிலும்  தமிழ் மக்களது காணிகள் ஏனையவர்களால் கபலீகாரம் செய்யப்பட்டு வருகின்றது.இவை ஒருபக்கமிருக்க தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஆதரவுடன் தமிழ் மக்களின் மண்ணில்  உள்ள வளம் அப்பட்டமாக மண் மாபியாக்களால் சூறையாடப்பட்டுகின்றது.வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளியில் நடைபெற்றுவரும் ஹில்மனைட் கலந்த மண் அகழ்வு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மண் அகழ்வு போன்ற செயற்பாடுகள் தமிழ் அதிகாரிகளின் ஆதரவுடனும் அதேபோன்று தமிழ் பேசும் அரசியல்வாதிகளின் ஆதரவுடனும் தான் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான சூழ்நிலைகளில் தமிழ் அரசியல் தலைவர்கள் தமது இடையிலே கட்டப்பட்டிருக்கும் கோமணத்தையாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டுமேயொழிய நவீன கோட்,சூட் தேடி அழைவதை நிறுத்த வேண்டும்.'தீர்வுத் திட்டம்,'  என்று தமிழ் மக்களை நம்பவைத்து காலம் கடத்துவதுதான் மிச்சம்.தமிழ் இளைஞர்களின்  வேலைவாய்ப்பு  பிரச்சினைகளையும் ,அதிகார அரசியலை பயன்படுத்தி கிழக்கில் தமிழ் மக்களுடைய அனைத்து வாய்ப்புக்களையும்  சூறையாடும் அராஜக அரசியலையும் முடிவுக்கு கொண்டுவரும் கொள்கைகளை யார் முன்வைக்கின்றார்களோ அந்தக் கட்சிக்கே இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

அந்த வகையில் இலங்கை தேசிய ஜனநாயக கட்சி மேற்கூறிய விடயங்களை முன்னிருத்தி தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றது.எமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கள்தான் எமது பிரதான கோரிக்கை .இந்த இலக்கினை அடைய நாம் இந்திய அரசாங்கத்துடனும் பேச இருக்கின்றோம்.இளைஞர் ,யுவதிகளுக்கான  தொழில்வாய்ப்புக்களுக்கான  போதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்திய முதலீட்டாளர்களுடன் பேசி அதனை இலங்கை அரசாங்கத்தினூடாக கொண்டு வருவோம்.ஆகவே நாம் மக்களுக்காக எடுக்கின்ற தீர்மானங்களுக்கு மக்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் என்றார்.இக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் சிவன் ரவிசங்கர் மற்றும் தேசிய அமைப்பாளர் இராசையா செல்லையா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: