மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கொலை சந்தேகத்தில் முன்னாள் கொலைக் குற்ற சிறைக் கைதி கைது.
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செம்மண்ணோடை கொண்டையன்கேணி கிராமத்திலுள்ள பாழடைந்த வீடோன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 11.08.2019 சடலமாக மீட்கப்பட்ட பெண் சனிக்கிழமை பிற்பகல் 10.08.2019 பதுறியா நகர், மீனவர் சங்க வீதியை அண்டியுள்ள அவரது வீட்டில் இருந்து காணாமல்போன நிலையில் அன்றிரவு 10 மணிக்கு பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இச்சம்பவத்தில் உஸனார் றாஹிலா (வயது 52) எனும் ஒரு குழந்தையின் தாயான மன நிலை பாதிக்கப்பட்ட பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேக நபரான அப்பெண்ணின் மருமகன் முறையான 28 வயதுடைய பிரம்;மச்சாரி நபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
கைதாகியுள்ள இந்நபர் ஏற்கெனவே கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மாற்றுத் திறனாளியான சிறுவன் ஒருவனைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைக்காவலில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் வழக்கை எதிர்கொண்டு வருபவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகலளவில் தனது மாமியான கொலை செய்யப்பட்ட பெண்ணை இந்நபரே அழைத்துச் சென்றிருக்கின்றார் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக தெரிவித்த பொலிஸார் சந்தேக நபரை திங்கட்கிழமை நீதிமன்றில் நிறுத்தவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.
மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
0 Comments:
Post a Comment