7 Jul 2019

வந்தாறுமூலை வரலாற்று சிறப்புமிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா

SHARE
வந்தாறுமூலை வரலாற்று சிறப்புமிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா.
இந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தென திகழ்கின்ற ஈழமணித்திருநாட்டின் இயற்கை எழில்மிகு கிழக்கிலங்கையில் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்டக்களப்பின் வடபால் செந்நெல் வயலும் செந்தமிழ் மரபும் கனிகளோடு கறவையினப்பாலும் ஒருங்கே அமையப்பெற்று நல்விருந்து ஓம்பும் சீரிய சைவர் குலம் வாழும் நலன்மிகு பழம்பதியாம் வந்தாறுமூலை தனில் பன்நெடுங் காலமாக கோயில் கொண்டு அடியார்கள் இடுக்கண் களைந்து இஷ்டசித்திகளை வாரிவழங்கும் வள்ளலாம் வந்தாறுமூலை வரலாற்று சிறப்புமிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா.

நிகழும் மங்களம் நிறைந்த விகாரி வருடம் ஆனி மாதம் 19ம் நாள் 04.07.2019 வியாழக்கிழமை சுபவேளையில்  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆனி மாதம் 31ம் நாள் 16.07.2019 செவ்வாய்க்கிழமை பௌர்ணமி தின சூரிய உதயத்தில் சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.


மஹோற்சவ நிகழ்வுகள்.

03.07.2019 புதன்கிழமை 
மாலை 05.00மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம் அனுஞ்ஞை, கிராம சாந்திப் பிரவேச பலி, வாஸ்த்து சாந்தி, விபூதி பிரசாதம் வழங்கப்படும்.

04.07.2019 வியாழக்கிழமை காலை 08.00மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி துவஜாரோகணம் எனும் கொடியேற்றம் நடைபெறும். இரவு சுவாமி உள் வீதி உலா நடைபெறும்.

05.07.2019 வெள்ளிக்கிழமை ஆலயத் திருவிழா 
பகல், இரவு சுவாமி உள் வீதி உலா நடைபெறும்.


06.07.2019 சனிக்கிழமை 
புதூர் குடி மக்கள்  அன்னாபிஷேகம், பகல் சுவாமி உள் வீதி உலா, இரவு வெளி வீதி உலா நடைபெறும்.


07.07.2019 ஞாயிற்றுக்கிழமை அத்தியா குடி மக்கள் 
பகல்1008 சங்காபிஷேகமும் உள் வீதி உலாவும், இரவு அன்னவாகத் திருக்காட்சியுடன் சுவாமி வெளி வீதி உலாவும் நடைபெறும்.


08.07.2019 திங்கட்கிழமை களுவத்தன் பனிக்கன் குடி மக்கள் பகல் சுவாமி உள் வீதி உலா, இரவு வெளி வீதி உலா நடைபெறும்.

09.07.2019 செவ்வாய்க்கிழமை காளியன் குடி மக்கள் 
பகல் சுவாமி உள் வீதி உலா, இரவு கூர்ம அவதாரமாக சுவாமி வெளி வீதி உலா வருதல் நடைபெறும்.


10.07.2019 புதன்கிழமை செட்டியார் குடி மக்கள் 
காலிங்க நர்த்தனம் பகல் சுவாமி உள் வீதி உலா, இரவு முத்துச் சப்பரத்தில் சுவாமி வெளி வீதி உலா நடைபெறும்.


11.07.2019 வியாழக்கிழமை கவுத்தன் குடி மக்கள் 
பகல் சுவாமி உள் வீதி உலா, இரவு வெளி வீதி உலா நடைபெறும்.


12.07.2019 வெள்ளிக்கிழமை காவேரி கண்ட குடி மக்கள்
பகல் சுவாமி உள் வீதி உலாவும் இரவு சுவாமி முத்துப்பந்தலின் கீழ் அரிதுயில் கொள்ளும் அனந்த சயன உற்சவம் நடைபெறும்.


13.07.2019 சனிக்கிழமை புலவனார் குடும்பம்
பகல் சுவாமி உள் வீதி உலா, பி.ப 03.00மணிக்கு சுவாமி திருவேட்டைக்கு புறப்படுவார். செந்நெல் விளைநிலத்தில் அமைந்துள்ள கிடாக் குளிப் பிள்ளையார் ஆலயத்தில் திருவேட்டை இடம்பெறும். இரவு கெருடன் கட்டு திருவிழா இடம்பெறும்.


14.07.2019 ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் பரமக் குடி மக்கள்
பகல் சுவாமி உள் வீதி உலா, இரவு வெளி வீதி உலா நடைபெறும்.


15.07.2019 திங்கட்கிழமை 
பெரிய பரமக் குடி மக்கள் பகல்1008 சங்காபிஷேகமும் உள் வீதி உலாவும், இரவு வெளி வீதி உலா, உறியடி உற்சவம், தீமிதித்தல் இடம்பெறும்.


16.07.2019 செவ்வாய்க்கிழமை அதிகாலை களுவன்கேணி இந்துமா சமுத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து யாக கும்பம் சொரிதல், பிரசாதம் வழங்குதல். இரவு திருவிளக்குப் பூஜை, திருப்பொன்னூஞ்சல், கொடியிறக்க மௌன உற்சவம், ஆஞ்சநேயர் உற்சவம் இடம்பெற்று இறுதியாக திருவருட் பிரசாதம் வழங்கப்படும்.

17.07.2019 புதன்கிழமை 
காலை பிராய்ச்சித்த அபிஷேகமும் மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹா விஷ்ணு பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று ஆசியுரையும் பிரசாதமும் வழங்கப்படும்.


18.07.2019 வியாழக்கிழமை மாலை வைரவர் மடை, ஆஞ்சநேயர் மடை, நாகதம்பிரான் மடை இடம்பெற்று விழா இனிதே நிறைவுபெறும்.

மஹோற்சவகால குருமார் விபரம்.

மஹோற்சவ பிரதம குரு
வேதாகம வித்யாபதி ஷாஹித்ய பாஸ்கரன் ஷப்த ரிஷி குரு பீடாதிபதி சிவாகம குரு வேந்தன் தேசமான்ய சிவஸ்ரீ குமார விக்னேஸ்வர சிவாச்சார்யார் (யாழ் வட்டுக்கோட்டை)


ஆலய பிரதம குரு

விஷ்ணு பூஜா, நவக்கிரக பூஜா துரந்தரர், சோதிட இளம் சைவமணி 
சிவஸ்ரீ சாட்சிநாதன் தெய்வேந்திரக் குருக்கள் 
(யாழ் வட்டுக்கோட்டை)


ஷர்வ சாதகம்

பிரம்மஸ்ரீ கேதீஸ்வர பவித்திர சர்மா (தர்ம சாஸ்தா குருகுலம் -இணுவில்)


உதவிக் குருமார்கள்

பிரம்மஸ்ரீ சிவநேச சர்மா
பிரம்மஸ்ரீ சதீஸ்வர சர்மா


விழாக்காலங்களில் விஷேட கதாபிரசங்கங்கள், கூட்டுப் பிரார்த்தனைகள், மேளக் கச்சேரிகள் மற்றும் சமய சம்மந்தமான கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெறும்.
விழாக்காலங்களில் தினமும் ஆலயத்தை சூழவுள்ள அன்னதான மடங்களில் அன்னதானம் வழங்கப்படும்.

05.07.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.00மணிக்கு கடைகள் ஏலத்தில் விடப்படும்.
எனவே பக்த அடியார்கள் பக்தி சிரத்தையோடு ஆசார சீலர்களாக விழாக்கால வழிபாடுகளில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் மஹா விஷ்ணு பெருமானுடைய திவ்விய திருவருள் பெற்றுய்யுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இவ்வண்ணம்
இறைபணியில்
ஆலய பரிபாலன சபையினர்.


SHARE

Author: verified_user

0 Comments: