முனைக்காடு கிராமத்தில் “காப்புமுனை” சஞ்சிகை வெளியீடு.
முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் 6ம் நாள் கலைநிகழ்வினை சிறப்பித்து வியாழக்கிழமை(11) “ காப்பு முனை” சஞ்சிகை வெளியீடு செய்யப்பட்டது.
முனைக்காடு கிராமத்தின் அடையாளமாக, இக்கிராமத்தின் பழைய பெயர்களில் ஒன்றான “காப்பு முனை” என்ற பெயரில் இச்சஞ்சிகை வெளியீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சஞ்சிகையின் முதற்பிரதியினை ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ப.மானாகப்போடி ஐயர் நாகசக்தி கலை மன்றத்தின் உறுப்பினர்களான சிறுவர்களுக்கு வழங்கி வைத்தார். இச்சஞ்சிகையினையை நாகசக்தி இந்து இளைஞர் மன்றத்தினர் வெளியீடு செய்துவைத்துள்ளனர்.
நாகசக்தி இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் ந.சுவாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற சஞ்சிகை வெளியீட்டில், முனைக்காடு விவேகானந்த வித்தியாலய அதிபர் மா.சத்தியநாயகம், ஓய்வுபெற்ற அதிபர் மூ.அருளம்பலம், மண்முனை தென்மேற்கு பிரதேச கலாசார உத்தியோகத்தர் ந.ருபேசன், கிராமசேவை உத்தியோகத்தர் செ.உதயகுமார், அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
காப்புமுனை சஞ்சிகைக்கான நயவுரை மண்முனை தென்மேற்கு பிரதேச கலாசார உத்தியோகத்தர் ந.ருபேசன் வழங்கியிருந்தார். இச்சஞ்சிகையின் முதல் பிரசவம் இது என்பதுடன், முனைக்காடு நாகசக்தி இந்து இளைஞர் மன்றத்தின் வரலாற்றினை தாங்கியே இச்சஞ்சிகை வெளிவந்திருக்கின்றது. தொடர்ந்தும் முனைக்காடு கிராமத்தின் அடையாளங்களையும், வரலாறுகளையும் தாங்கியதாக இச்சஞ்சிகை வெளியிடப்படவுள்ளதாகவும் ஆசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
முனைக்காடு கிராமத்தில் இருந்து 1984ம் ஆண்டு ஒளிக்கல்லூரி அமைப்பினால், சி.வரதசீலன் அவர்களை இதழாசிரியராகக் கொண்டு “ஒளி” என்ற பெயரில் சஞ்சிகை வெளிவந்திருக்கின்றது. காலப்போக்கில் இடம்பெற்ற யுத்தம், பல்வேறு அனர்த்தங்களின் காரணமாக ஒளி சஞ்சிகை ஒளி இழந்த நிலையில், 2012ம் ஆண்டு எழுதளிர் அமைப்பினால் “தளிர்”என்ற சஞ்சிகையும் வெளியீடு செய்யப்பட்டு இதுவரை தளிர் என்ற பெயரில் மூன்று சஞ்சிகைகள் 2016ம் ஆண்டு வரை வெளியீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே வ.துசாந்தன் அவர்களை இதழாசிரியராக கொண்டு “காப்புமுனை”சஞ்சிகை வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment