10 Jun 2019

அரசியல் தலைமைகள் விடயத்தில் காட்டப்படும் அக்கறைக்கு சமமாக அப்பாவி மக்கள் விடயத்திலும் அக்கறை காட்டப்படுதல் வேண்டும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

SHARE
அரசியல் தலைமைகள் விடயத்தில் காட்டப்படும் அக்கறைக்கு சமமாக அப்பாவி  மக்கள் விடயத்திலும் அக்கறை காட்டப்படுதல் வேண்டும்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
அடிப்படையே இல்லாத சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் விடயத்தில் விசாரணைகளை துரிதப்படுத்தி, குற்றமற்றவர்கள் அனைவரையும் விரைவாக விடுதலை செய்வதற்கான விஷேட பொறிமுறை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG அவசர வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளது.

இதனை முக்கிய வேண்டுகோளாக அரசியல் தலைமைகள் வலியுறுத்தி, அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அக்கட்சி கேட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அக்கட்சி திங்கட்கிழமை 10.06.2019 வெளியிட்டுள்ள அறிக்கையயொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் தற்போதைய நெருக்கடி மிக்க சூழ்நிலையில் அரசியல் தலைமைகள் மீதான குற்றச்சாட்டுக்களைத் தெளிவுபடுத்துவதற்காக காட்டப்படும் அக்கறை போலவே அப்பாவிகள் விடயத்திலும் உடனடி அவதானமும், அக்கறையும் காட்டப்படுதல் வேண்டும்.

குண்டுத்தாக்குதல் இடம்பெற்று சுமார் ஒன்றரை மாதம் கடந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பலரும் இதுவரை எதுவித முறையான விசாரணைகளுமின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர் சாதாரணமாக குர்ஆன் பிரதிகளை வைத்திருந்ததற்காகவும், சமையலுக்கு பயன்படுத்தும் கத்திகளை வைத்திருந்ததற்காகவும், உலக வரைபடம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலும், பௌத்த மதத்தை அவமதிக்கும் சின்னங்களையுடைய ஆடை அணிந்திருந்தார் என்பன போன்ற அற்பமான காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அது மாத்திரமன்றி இவ்வாறு கைது செய்யப்படுகின்றவர்களை  உடனடி பிணையில் விடுவிக்க முடியாதவாறும், அவர்கள் தொடர்பான விடயங்களில் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்களில் பிணை பெற  முடியாதவாறும் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ICCPR சட்டங்களின் கீழ்   அவர்களுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனால்  இவ்வாறான கைதுகளை எப்படிக் கையாள்வது? இது தொடர்பான முறைப்பாடுகளை யாரிடம் தெரிவிப்பது? இவர்கள் தரப்பு நியாயங்களை எப்படி நிரூபிப்பது? இவர்களை எப்படி விடுவிப்பது? எனத்தெரியாத நிலையில் இன்று கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் நாள்தோறும் நீதிமன்ற வளாகங்களுக்கும் பொலிஸ் நிலையங்களுக்குமாக அலைந்து திரிவதை அவதானிக்க முடிகின்றது.

புனித ரமழான் மாதத்திலும் கூட பல ஏழைத் தாய்மார்கள் இவ்வாறு தங்களது குழந்தைகளுடன் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்த காட்சி அனைவரையும் கண்கலங்கச் செய்திருந்தது. 

எனினும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்கும் வகையில் இதுவரை எவ்வித காத்திரமான  முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டதாக தெரியவில்லை.

ஏப்ரலில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை ஒட்டு மொத்த நாட்டு மக்களையும், குறிப்பாக முஸ்லிம் மக்களை கடுமையாக பாதித்திருக்கின்றது.

அதுமட்டுமன்றி தேசிய அரசியலிலும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலைமை  இந்நாட்டு முஸ்லிம் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பலவாறான நெருக்குவாரங்களையும், அச்சுறுத்தல்களையும் உருவாக்கியிருக்கிறது. பயங்கரவாதிகள் விட்டுச்சென்றிருந்த இடத்திலிருந்து இனவாதிகள் மற்றுமொரு அடக்குமுறை கலாச்சாரத்தினை இந்நாட்களில் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் சாதாராண அப்பாவி  முஸ்லிம்கள்  பிரதானமாக இரண்டு அபாயங்களுக்கு ஏக காலத்தில்  முகம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதிலொன்றுதான்   ஏப்ரல் 21ம் திகதிக்குப் பின்னர் திட்டமிடப்பட்ட வகையில் முஸ்லிம் மக்களின் மீதும், அவர்களின்  பொருளாதாரத்தின் மீதும் நடத்தப்பட்டுவருகின்ற இனவாத அச்சுறுத்தல்களும்  வன்முறைகளுமாகும். இன்னுமொன்று, ஆதாரங்களேதுமின்றி வெறும்  சந்தேகத்தின் பேரில் நடைபெறும்  கைதுகள்;. இவை இரண்டுமே சமாந்தரமான ஒரு உளவியல் யுத்தத்தினை முஸ்லிம்கள் மீது கடுமையாக  தொடுத்து வருகின்றன.

இந்த இடத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள்  என அனைவரும் ஒன்றிணைந்து தங்களது பதவிகளை ராஜினாமாச் செய்தது பாராட்டத்தக்கது. அது இந்நாட்டில் திட்டமிட்டு அரங்கேற்றப்படவிருந்த இனவாத அழிவுகளை தோல்வியடையச் செய்துள்ளது.

அதன் பின்னரான தேசிய அரசியல் களம் முற்றிலும் மாறுபட்டதாக இப்பொழுது மாறியிருக்கிறது.

அமைச்சர்களின் ஒட்டு மொத்த இராஜினாமா முழு உலகின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இதனால் இலங்கை அரசு நாளுக்கு நாள் பல கண்டனங்களுக்கும், அழுத்தங்களுக்கும் ஆட்பட்டு வருகின்றது.

இந்த நிலமையினை தவிர்க்கும் முகமாக இப்பொழுது அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மீள தமது பதவிகளில் இணைந்து கொள்ளுமாறு, மஹாநாயக்க தேரர்கள் உட்பட பலரும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

ஒரு மாத காலத்திற்குள் அனைத்தும் தெளிவுபடுத்தப்பட்டு, சமகால நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்' என முஸ்லிம் அரசியல் தலைவர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுவும் உண்மையில் வரவேற்கத்தக்க ஒரு விடயமேயாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: